தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக 18்ம் தேதி பிரிமியம் பெய்டு ரசிகர் ஷோ இரண்டு காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர் ஷோ நடத்த, 19ம் தேதி அரசு அனுமதிக்காததால் வரும் 18ம் தேதி மாலை 6.30 மணி, இரவு 10.30 மணி என இரண்டு சிறப்பு காட்சிகளை நடத்த லியோ படக்குழு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இந்நிலையில், துபாயில் லியோ படத்தின் பிரிவியூ ஷோ நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. துபாயில் உள்ள சிலிக்கான் என்ற சென்ட்ரல் மாலில் இந்த பிரிவியூ ஷோ திரையிடப்படுகிறது. இதற்காக டிக்கெட் எதுவும் இல்லை. துபாயில் உள்ள சினிமா ரசிகர்கள், இந்த பிரிவியூ ஷோவை இலவசமாக கண்டுகளிக்கலாம். வரும் 14ம் தேதி இந்த பிரிவியூ காட்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் நடக்கும் லியோ பிரிவியூ ஷோ நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தின் இசையமைப்பாளர் அனிரூத், படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் அர்ஜூன் மற்றும் படக்குழு சார்ந்த இன்னும் சிலர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. பிரிவியூ ஷோ நடப்பது சிலிக்கான் சென்ட்ரல் மால் என்பதால், அங்கு குறிப்பிட்ட அளவில்தான், ரசிகர்கள் திரள முடியும் என்பதால், அந்த இடத்தில் இலவசமாக பிரிவியூ ஷோ நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழ்நாட்டில், லியோ இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை. பிரிவியூ ஷோ தமிழகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் நடத்தி இருக்கலாம். அல்லது கேரளா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களில் கூட நடத்தி இருக்கலாம். ஆனால், துபாயில் நடத்துவது, பலத்த ஏமாற்றத்தை விஜய் ரசிகர்களுக்கு தந்துள்ளது. எனினும் துபாயில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.
துபாய் சிலிக்கான் சென்ட்ரல் மாலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நிச்சயம் தளபதி விஜய் வருவார் என மிக ஆர்வமாக உள்ளனர். அவருடன் செல்பி எடுக்கலாம் என்ற ஆசையிலும் காத்திருக்கின்றனர். ஆனால், வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தில் பிஸியாக இருக்கும் விஜய், துபாய் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதுதான் உண்மை. அதே போல், வெளிநாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் திரிஷாவும், இந்நிகழ்வுக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அதே வேளையில், கடைசி நேரத்தில் நடிகர் விஜய் மனம் மாறி, துபாயில் நடக்கும் பிரிவியூ ஷோ நிகழ்ச்சிக்கு செல்லும் பட்சத்தில், படத்தின் நாயகி என்ற முறையில், நிச்சயம் திரிஷாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் நடக்கும் இடமும், துபாயில் இந்த லியோ பிரிவியூ ஷோ நிகழ்ச்சி நடக்கும் இடமும் சில மணி நேரங்களில் காரில் பயணிக்கும் தூரம்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் திரிஷா வருவாரா, மாட்டாரா என்பது இப்போதைக்கு விஜய் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.





