தமிழ் சினிமாவில் கில்லி உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு பசங்க படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். அவரது நடிப்பில் வெளியான களவாணி கலகலப்பு தேசிங்கு ராஜா வாகை சூடவா கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இதில் களவாணி படம் விமலுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. அதே போல் வாகை சூடவா படத்திலும் கிராமத்தில் வாத்தியார் வேலை செய்யும் கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை விமல் வெளிப்படுத்தி இருந்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனும் விமலும் இணைந்து நடித்திருந்தனர்.
கடந்த 2013ம் ஆண்டில் இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடித்த தேசிங்கு ராஜா படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் எழில் இயக்கத்தில் விமல், தேசிங்கு ராஜா 2 என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்திருக்கிறார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா என்ற 2 தெலுங்கு நடிகைகள் இந்த படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
தேசிங்கு ராஜா 2 படம், தேசிங்கு ராஜா முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் காமெடி கலந்த கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விமலுடன் குக் வித் கோமாளி புகழ் ரவி மரியா ரோபோ சங்கர் சிங்கம் புலி ரெடின் கிங்ஸ்லி ராஜேந்திரன் லொள்ளு சபா சுவாமிநாதன் போன்றோர் நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தேசிங்குராஜா 2 படத்தை தயாரித்துள்ளது. படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் தேசிங்கு ராஜா 2 படம் வருகிற 11ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாக கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 11ம் தேதி தேசிங்கு ராஜா 2 படம் திரைக்கு வருகிறது. சமீபகாலமாக விமலுக்கு பெரிய வெற்றிப் படங்கள் இல்லாததால் தேசிங்கு ராஜா 2 பெரிய வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.





