தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான கலைஞர்களில் ஒருவர் தலைவாசல் விஜய். எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்துவார். ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் வித்தை கற்றவர் தலைவாசல் விஜய் என்றால் அது மிகையல்ல.
தலைவாசல் காதல் கோட்டை துள்ளுவதோ இளமை உன்னை நினைத்து சிம்மராசி காதலுக்கு மரியாதை சண்டக்கோழி பேரழகன் என பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்திய தலைவாசல் விஜய், இப்போது ஹாட் ஸ்டாரில் 100 எபிசோடுகளை நிறைவு செய்த ரெசார்ட் வெப் சீரிஸில் நெடுமாறன் கேரக்டரில் செஃப் ஆக மிக அற்புதமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த ரெசாா்ட் வெப் சீரிஸில் விஜயகுமார் கஞ்சா கருப்பு இளங்கோ குமணன் படவா கோபி இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரெசார்ட் எம்டி ஆக ரகுபதி கேரக்டரில் நடித்த நடிகர் இளங்கோ குமணன் ஒவ்வொரு காட்சியிலும் முகபாவனைகளிலும் வசன உச்சரிப்பிலும் அழுத்தமான தனிக்கவனமும் பரந்த வரவேற்பையும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது, ரெசார்ட் வெப் சீரிஸில் செஃப் நெடுமாறன் கேரக்டரில் நடித்த என் மீது சிலர் கோபப்பட்டார்கள். திட்டவும் கூட செய்தார்கள். அதை எல்லாம் ரீல்ஸ்சில் கமெண்ட்டுகளாக வரும்போது சாதாரணமாக பார்த்து விட்டு கடந்து போய் விடுவேன். அது அந்த நெடுமாறன் கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.
தலைவாசல் படத்தில் நடித்த போது எனக்கு தலைவாசல் விஜய் என்று டைட்டில் கார்டில் போட்டார்கள் ஆனால் என்னை கானா பாபு என்று அழைத்தனர். கானா பாட்டை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியதே டைரக்டர் செல்வா தான். அந்த படத்தில் 17, 18 கானா பாடல்கள் இருக்கும். அப்பவும் என்னை கானா பாபு என்றுதான் கூப்பிட்டுட்டு இருந்தாங்க. ஆனா அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதுக்கு அப்புறம் காதல் கோட்டை படத்தில் கவலைப்படாதே சகோதரா என பாட்டு பாடியதால் அப்போது என்னை சகோதரா சகோதரா என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அதன்பிறகு துள்ளுவதோ இளமை படம் செம ஹிட் ஆச்சு. அந்த படத்தில் மீன் விக்கிற கதாபாத்திரத்தில் தனுஷூக்கு அப்பாவா நடித்திருந்தேன். அதில் நைனா என்ன நைனா எங்க போயிட்டு வர்றே? இந்த காலத்து பசங்க பாத்ரூம் போனா அவ்வளவு லேட் பண்றீங்க? என்று தனுஷை பார்த்து பேசுவேன். அப்போது என்னை நைனா நைனா என்றனர். இப்படி எனக்கு பல பேர் இருக்குது என்று நடிகர் தலைவாசல் விஜய் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





