தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவரது பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. தொடர்ந்து ரஜினி நடித்த அண்ணாமலை அருணாசலம் பாட்ஷா போன்ற படங்களுக்கு அவர் இசையமைத்தவர். தேவா பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையாக இருக்கின்றன.
பிறகு அவ்வை சண்முகி சூரியன் காதல் கோட்டை என தேவா இசையில் பல படங்களில் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தன. என் ஆசை மச்சான் ஆசை ஏழையின் சிரிப்பில் சிட்டிசன் செந்தூரப்பாண்டி பாஞ்சாலங்குறிச்சி பம்மல் கே சம்பந்தம் பரம்பரை என தேவா இசையமைத்த ஏராளமான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
இசைஞானி இளையராஜா தனது இசையில் உருவான பாடல்களுக்கு காப்பிரைட் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவகாரம் செய்து வரும் நிலையில், இசையமைப்பாளர் தேவா என்னுடைய இசையில் வந்த பாடல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம். நான் காப்பிரைட் கேட்க மாட்டேன். இப்போதும் என் இசையை ரசிகர்கள் ரசிப்பதே முக்கியம் எனறு கூறியிருப்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, அண்ணாமலை படத்தில் என்னை இசையமைப்பாளராக போட நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டிப்பாக தயக்கம் இருந்திருக்கும். ஏற்கனவே அவரது படங்களுக்கு ஒருவர் இசையமைத்த நிலையில், புதிதாக இப்போது வரும் ஒருவரிடம் படத்தை கொடுப்பது, படம் என்னாகுமோ என்ற தயக்கத்தை தர வாய்ப்பு இருக்கிறது.
அப்போது நிறைய சம்பவங்கள் நடந்தது. ரஜினி ரசிகர்கள் என்னை மிரட்டக் கூட ஆரம்பிச்சாங்க. ஏன்னா அவங்க தலைவர் படம், மியூசிக் எல்லாம் அப்படி இருக்கணும் என்று அவங்க ஆசைப்பட்டாங்க. அது கூட தப்பில்லே, ஆனா அதே ரசிகர்கள் என்னை தலைமேல தூக்கி வெச்சு ஆடுனாங்க. படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம். அது என் வாழ்க்கையில் ரொம்பவும் ஹார்டு ஒர்க் ஆன இடம்.
அண்ணாமலை படத்துக்கு கம்போஸ் பண்ணிய போது வெறித்தனமாக பண்ணியிருந்தேன். வெறித்தனம் என்றால் அப்படி ஒரு வெறித்தனம். இன்னிக்கு ஒரு உண்மையை சொல்றேன். இது ரஜினிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை கேட்டுப் பாருங்க. அண்ணாமலை படத்துல வர்ற அத்தனை பாட்டும் நான் போட்ட முதல் டியூனிலேயே ஓகே ஆனதுதான். ஒரே ஒரு டியூன்தான், அதுக்கு அப்புறம் வேற டியூன் போடலே என்று இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.





