சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது. படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். புஷ்பா 1ம் பாகத்தை விடவும் புஷ்பா 2ம் பாகம் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
புஷ்பா படத்தின் 1ம் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஊர் சொல்றியா மாமா, சாமி சாமி , ஸ்ரீ வள்ளி, ஏய் பட்டா இது என் பேட்ட போன்ற பாடல்கள் பெரிய அளவில் டிரண்டிங் ஆகின.
ஆனால் புஷ்பா 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்த நிலையில், பின்னணி இசையமைக்கவில்லை என்ற தகவல் கடந்த வாரம் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன், அஜனீஸ் லோகநாதன் ஆகியோர் பின்னணி இசையமைத்து வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
மேலும் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன், புஷ்பா 2 வேலைகள் காத்திருக்கிறது என்று பேசியதால், அவர் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசை வேலைகளில் பிஸியாக உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக புஷ்பா 2 படம் சம்பந்தமான எந்த ஒரு தகவலையும், தேவி ஸ்ரீ பிரசாத் அவருடைய வலைதள பக்கங்களில் பதிவு செய்யவில்லை. ஆனால் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள கங்குவா படம் குறித்து தொடர்ந்து பதிவுகளை செய்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். புஷ்பா 2 படத்தில் பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும், படத்தில் உள்ள ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடிகை ஸ்ரீலிலா நடனம் ஆடுகிறார் என்ற அறிவிப்பை கூட தேவி ஸ்ரீ பிரசாத் கண்டு கொள்ளவில்லை.
இதன் மூலம் புஷ்பா 2 படக்குழுவின் மீது அவர் பயங்கரமான கோபத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிய வருகிறது. அதனால் புஷ்பா 2 படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்குள் என்ன பிரச்னை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





