ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். வசனகர்த்தா சத்தியமூர்த்தியின் மகனான இவர், ஆரம்பம் முதலே திரைத்துறைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்த தேவி ஸ்ரீ பிரசாத், இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் தன்னை முழு நேர இசையமைப்பாளராக மாற்றிக்கொண்டார்.
அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது ஆர்யா 2 திரைப்படம் தான். அதில் இடம்பெற்ற ரிங்க ரிங்கா பாடல் பட்டித் தொட்டிய எங்கும் ஒலித்து ஹிட் ஆக, அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் ரிங்க ரிங்கா பாடலை முணுமுணுத்தது.
இது மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சிங்கம், கந்தசாமி, வில்லு, சச்சின், வீரம், வேங்கை, சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், சந்தோஷ் சுப்ரமணியம், குட்டி, மன்மதன் அன்பு, மழை, புலி, திருப்பாச்சி என அவரது ஹிட் லிஸ்ட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகிலும், கோலோச்சி இருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.
சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற அதன் பாடலும் உறுதுணையாக இருந்தது. அந்தப் படத்திற்கு இசையமைப்பதற்காக தேசிய விருதையும் தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அவர் தமிழிலும் பிஸியாக இருக்கிறார்.
குறிப்பாக சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகும் கங்குவார் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளர். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் பின்னணி இசை வெறித்தனமாக இருப்பதாக, பலரும் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் இசையமைத்து வருகிறார் அவர். இதுபோக விஷாலின் ரத்னம் திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைப்பாளர்.
தனுஷ் சேகர் கமுலா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் புக் ஆகியுள்ளார். இது மட்டுமல்லாமல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார். இப்படி தமிழில் படு பிஸியாக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், சிம்புவின் 48வது திரைப்படத்திற்கும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி எடுக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





