தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாத்தி. தெலுங்கில் முதல் முறையாக நேரடி படத்தில் தனுஷ் நடிக்க, கலவையான விமர்சனத்துடன் வாத்தி ஓரளவு வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரால் ஒரு கிராமம் அடிப்பட்டிருக்க, அங்கிருந்த மில்லர் ஆங்கிலேயர்களை எப்படி எதிர்கொண்டார் எனும் ஒன்லைனை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
ராக்கி, சாணி காயிதம் படங்களில் ரத்தம் தெறிக்க கதை சொல்லியிருந்த அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கென், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிட்டதட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து தனது 50வது படத்தில் தனுஷே இயக்கி நடித்து வருகிறார். செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான செட் போடப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு மீண்டும் நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில், 35 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூனாவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகிறதாம். 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறும் கதையாக இது எடுக்கப்படுகிறது. அரசியல் மற்றும் மாபியா பின்னணியில் எடுக்கப்படும் இதன் கதையை கேட்ட உடனேயே, நாகர்ஜூன் ஒப்பு கொண்டாராம். இதன் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் ஷூட்டிங் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





