நடிகர் தனுஷ் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ராயன் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லிகடை என 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன.
இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷின் சொந்த அண்ணனாக இருந்தாலும் ஒரு குருவாக அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து முன்னிலைக்கு கொண்டு வந்தவர். என் சினிமா பயணத்தின் அஸ்திவாரமே அண்ணன் செல்வராகவன் தான் என்று பலமுறை மேடைகளில் நடிகர் தனுஷ் மேடைகளில் பேசி வருகிறார். ஒரு நடிகனாக என்னை உருவாக்கியவர் அவர்தான் என்று நன்றி கூறி வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் தனுஷ் கூறியதாவது, புதுப்பேட்டை படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்தில் என் நடிப்பை பார்த்து பலரும் வெகுவாக பாராட்டினர்கள். அந்த பெருமைக்கு, பாராட்டுக்கு உரியவர் இயக்குனர் செல்வராகவன்தான்.
புதுப்பேட்டை படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி முடியும் வரை ஒவ்வொரு சீனிலும் என்னுடைய நடிப்பு முழுவதும் அவரது பிரதிபலிப்புதான். அவர் சொல்லிக் கொடுத்ததை, செய்து காட்டியதை கேமரா முன்பு நான் செய்தேன். அவர் செய்து காட்டியதில், நடித்து காட்டியதில் 10 சதவீதம் செய்தாலே அது பெரிய வெற்றிதான்.
அதனால் புதுப்பேட்டை படத்தில் என்னுடைய பங்களிப்பு என்பது இயக்குனர் நடித்து காட்டியதை, நான் திருப்பி செய்தேன். ஆனால் அந்த படத்தில் முதலில் நான் நடிக்க மறுத்துவிட்டேன். பெரிய டான் போல ரவுடியாக இருந்துக்கொண்டு, மற்றொரு பெரிய டான் ரவுடியை ஒல்லியாக, சின்ன பையன் போல இருக்கும் நான் கொல்வது போல் நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா, என்று கேட்டேன்.
செல்வராகவனும், நீ சொல்வது சரியான பாயிண்டுதான் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இதை கேள்விப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன், என்னை நேரில் அழைத்து திட்டினார். அவரும் அந்த படத்தில் வசனம் எழுதி பணியாற்றினார். ஏண்டா அந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்கறே, நீ ரவுடிகளை நேரில் பார்த்திருக்கிறாயா, உன்னை மாதிரி தாண்டா அவங்க இருப்பாங்க. இந்த கேரக்டரில் நீதான் நடிக்கணும், தைரியமா நடி என்று சொன்னார். பாலகுமாரன் சார் சொன்ன தைரியத்தில்தான் புதுப்பேட்டையில் நடித்தேன், என்று தனுஷ் கூறியிருக்கிறார்.





