தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்பது மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்பதும் முக்கிய அடையாளமாக இருக்கிறது. நடிகர் மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர் என்ற நிலைகளை தாண்டி நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி இயக்குனராகவும் தற்போது மாறி வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர் இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரஜினி தரப்பிலும், கஸ்தூரிராஜா தரப்பிலும் குடும்பத்தினர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள், மனக்கசப்பு காரணமாக மீண்டும் வாழ்க்கையில் இணையப் போவதில்லை என்பதில் இருவரும் ஒரு உறுதியாக இருந்தனர். இதனால் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமணம் செல்லாது, தங்கள் திருமணத்தை ரத்து செய்யுமாறு விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணை இந்த மாதம் அக்டோபரில் 7ம் தேதியும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகவில்லை. அதன்பிறகு வழக்கு விசாரணை 19ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் அவர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக இல்லை.
இதையடுத்து வருகிற நவம்பர் 2ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்ற தகவல் பரவி வருகிறது. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் இருந்த போது, லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை அழைத்து அப்பாவின் நிம்மதி, சந்தோஷம் முக்கியமா அல்லது உன்னுடைய கோபமும் பிடிவாதமும் முக்கியமா என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா, விவாகரத்து என்ற முடிவிலிருந்து பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இருந்தபோது வாங்கிய புதிய வீட்டில் தற்போது சந்தித்து மனம் விட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. தங்களுக்குள் எந்த விதமான பிரச்சினைகளும் இனி எதிர்காலத்தில் வராமல் எப்படி பார்த்துக் கொள்வது என்று பல முக்கிய விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டதாகவும், அதனால் மீண்டும் அவர்கள் இணைவதை அவர்களே மிக விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் குறிப்பாக தனுஷ், ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





