தமிழ் சினிமாவில் அடிக்கடி கலைஞர்களின் மறைவு என்பது கலைத்துறையினரை பலத்த அதிர்ச்சியடைய செய்து விடுகிறது. சினிமா சார்ந்தவர்களை மட்டுமின்றி அவர்கள் நடித்த இயக்கிய படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் அவர்களது மறைவு பெரிய துக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
வயது முதுமை காரணமாக சில கலைஞர்கள் மறைந்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.
சமீபத்தில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார். 48 வயதில் அவரது திடீர் மறைவு என்பது பலருக்கும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் இருதய அறுவை செய்திருந்த நிலையில் அவரது மறைவு என்பது சினிமா துறை சார்ந்தவர்களை மீளா துயரில் ஆழ்த்தியது.
தன்னை போலவே தன் மகன் மனோஜூம் பெரிய கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டும் என்றுதான் இயக்குனர் பாரதிராஜா அவரை, தாஜ்மகால் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மனோஜூம் பல படங்களில் நடித்தார். ஆனால் நல்ல நடிப்பாற்றல் இருந்தும் அவருக்கு சரியான கதைகள் அமையாததால் பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பெற முடியவில்லை.
நடிகராக பெரிய வெற்றியை பெறாத போதிலும் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் மனோஜ் பாரதிராஜா. ஆனால் அந்த படமும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறாத நிலையில், தனது அடுத்த நகர்வுக்கான முயற்சிகளில் அவர் இருந்த போது திடீரென அவரது மறைவு என்ற துக்கம் நிகழ்ந்தது. இப்போது மீண்டும் ஒரு சோகம் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு கலைஞர்களை சோகத்தில் தள்ளியுள்ளது.
ஸ்ரீகாந்த் – சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தை இயக்கியவர் எஸ் எஸ் ஸ்டான்லி. இதில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தையும் எஸ் எஸ் ஸ்டான்லி டைரக்ட் செய்தார். இந்த படமும் ரசிகர்களின் கவனம் பெற்றது.
மெர்க்குரி பூக்கள் கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கிய எஸ் எஸ் ஸ்டான்லி ஆண்டவன் கட்டளை இராவணன் சர்கார் பொம்மை நாயகி என பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்திலும் நடித்திருந்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். 58 வயதான அவரது மறைவு சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





