தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவிலிருந்து அமரன், பிரதர் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதில் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மழை குவித்து வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமரன் ஓடிக்கொண்டிருக்கிறது. சாய் பல்லவி, சிவகார்த்திகேயனின் நடிப்பும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கமும் கச்சிதமாக அமைந்திருப்பதால் அமரனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. வெறும் 4 நாட்களில் இந்த படம் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் வெளியான ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இயக்குநர் ராஜேஷிற்கு இந்த திரைப்படம் மோசமாக அமைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறினர்.
இதேபோல் கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும் தோல்வி அடைந்திருக்கிறது. இயக்குநர் நெல்சன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் காமெடியிலிருந்து எதுவும் எடுபடாததால் பிளடி பெக்கர் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியுள்ளது. அதேசமயம், கவினுக்கும் இந்தாண்டு வெளியான இரண்டாவது தோல்வி படமாக இது அமைந்துவிட்டது.
இப்படியான சூழலில் யாரும் கவனிக்காத நேரத்தில் சக்கை போடு போட்டு வருகிறது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம். தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. துல்கர் சல்மானே தமிழுக்கும் வாய்ஸ் கொடுத்திருப்பதால் அந்த உறுத்தல் எதுவும் இல்லாமல் தமிழுக்கும் இத்திரைப்படம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
ஸ்கேம் 1992 தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் லக்கி பாஸ்கருக்கு, தமிழ் ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளனர். இதனால், மாநிலமெங்கும் லக்கி பாஸ்கருக்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் வசூலும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. ஏற்கெனவே தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என 2 வெற்றி படங்களை கொடுத்த துல்கர், தற்போது ஹாட் ட்ரிக் அடித்திருக்கிறார்.
லக்கி பாஸ்கரை இயக்கியது வேறு யாருமல்ல, இதற்கு முன்பு தனுஷை வைத்து வாத்தி எனும் படத்தை கொடுத்த வெங்கட் அட்லூரிதான். இவரா இப்படியொரு வெறித்தனமான படத்தை எடுத்திருப்பது என பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் படத்தை பார்த்துள்ள தனுஷ், வேற லெவல் படம் என்று கூறியிருக்கிறார். தமிழில் அமரன் படம் சக்கை போடு போடும்போது துல்கர் படத்தை மட்டும் தனுஷ் வாழ்த்தியிருப்பதாக சிலர் முணுமுணுத்து வருகிறார்கள்.





