தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தொடங்கி, கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வரை, அவரது நடிப்பின் பரிமாணம் பல கட்டங்களைத் தாண்டி விட்டது. ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களில் தனது தேர்ந்த நடிப்பிற்காக தேசிய விருதையும் தனுஷ் பெற்றார்.
நடிப்பு மட்டுமல்லாமல், பாடலாசிரியர், தயாரிப்பு என திரையுலகில் பல துறைகளிலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, அவர் இயக்கத்தில் எப்போதும் ஒரு கண் வைத்து இருந்தார் என்று கூறலாம். தனது முதல் திரைப்படம் ஆக, ராஜ்கிரனை வைத்து அவர் பவர் பாண்டி படத்தை எடுத்தார்.
காலம் கடந்த பின்பும் தாங்கி நிற்கும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளைஞர்களின் மனதை வருடியது. குறிப்பாக தமிழ் சினிமா இதுவரை சொல்லாத முதியோரின் காதலை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார் தனுஷ். தனது முதல் திரைப்படத்திலேயே, சிறந்த இயக்குனர் என்ற புகழுக்கு தனுஷ் சொந்தக்காரரானார்.
இப்படியான சூழலில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தனுஷே இயக்கி நடித்திருக்கிறார். ராயன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களே, அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, சந்திப் கிஷன், காளிதாஸ் உட்பட ஏராளமானோர் நடித்து இருக்கிறார்கள். வடசென்னையை மையப்படுத்தி இந்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ராயன் திரைப்படத்திலிருந்து அடங்காத அசுரன் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் பாடல் அந்த அளவு சிறப்பாக இல்லை என்றும் சுமாராகவே இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





