நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14ம் தேதியன்று வெளியான படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் டைரக்ட் செய்த இந்த படத்தில் விஜய் சேதுபதி சலூன்கடை பார்பர் கேரக்டரில் நடித்துள்ளார். நட்டி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
முதல் நாள் முதல் காட்சி அடிப்படையில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளதால், தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கு முன்பே பத்திரிகையாளர் பிரிவ்யூ ஷோ காட்டப்பட்டதால், அவர்களும் சமூக வலைதளங்களில் மிக நல்ல படம் என்று விமர்சித்துள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படமே இல்லை. அவர் கடைசியாக பொன்ராம் இயக்கத்தில் நடித்த டிஎஸ்பி படம் மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்தது. அதன்பிறகு அவர் இந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த ஜவான் படம் ரூ. 1150 கோடி வரை வசூலித்த நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவில்லை.
இதற்கிடையே மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு, இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளதால் தீபாவளிக்கு விடுதலை 2 படம் வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படமும் அடுத்து ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.
இப்போது மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், விடுதலை 2 படம், ட்ரெயின் படங்களும் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விடுதலை படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், விடுதலை 2 படமும் பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த வெள்ளியன்று, மகாராஜா படம் ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளில் ரூ. 7 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த நிலையில், இப்போது 3 நாட்களில் ( வெள்ளி, சனி, ஞாயிறு) என 32. 6 கோடி ரூபாய் ( 32 கோடி 60 லட்சம் ரூபாய்) உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக, படத்தை தயாரித்த பாஷியன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து, பிளாக்பஸ்டர் வெற்றி என்றும் தெரிவித்துள்ளது.





