வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோட். தளபதி விஜய் நடித்திருந்த இந்த திரைப்படம், வழக்கம் போல் வசூல் ரீதியாக பலரது கவனத்தையும் பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக கோட் திரைப்படம் அந்த அளவு பேசப்படவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அதர பழசான கதையும், எரிச்சல் ஊட்டும் இரண்டாம் பாதியும் தான்.
சொல்லப்போனால் படத்தின் இரண்டாம் பாதியில் மகன் விஜய்யின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் பல காட்சிகள் உறுத்துவது போலவே அமைந்தன. இது மற்ற ரசிகர்களுக்கு அந்த அளவு எடுபடவில்லை என்றே கூறலாம். அதேபோல் மிக முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவும், துள்ளலான இசையை அதில் கொடுக்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருப்பினும் அந்த திரைப்படம் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதேசமயம், படத்தினால் பெரிய அளவு லாபம் இல்லை என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க கோட் திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு இதுவரைக்கும் வெளியாகாமலேயே இருக்கிறது.
வெங்கட் பிரபு அஜித்தை வைத்து தான் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த திட்டம் எடுபடாது என்று கூறப்படுகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையை எழுதி வெங்கட் பிரபு காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் குழுவில் இருக்கும் நடிகரான வைபவ், சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து தான் படம் இயக்குவார் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த இடைவேளையில், அவர் கோவா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.





