ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட் ஆகும் என்பதை படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் உணர்த்தியிருப்பதாக அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி ரஜினிக்கும் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருப்பதாகவும் அதன் வெளிப்பாடுதான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நெல்சன் திலீப்குமாரை சில நொடிகள் விடாமல் கட்டி அணைத்தது என்றும் கூறுகின்றனர் படக்குழுவினர்.
படத்துக்கான டிக்கெட் புக்கிங் இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்தப் படம் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதால் நிச்சயம் இது ஹிட்டாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருப்பதால் பலருக்கும் ஜெயிலர் ஃபீவர் அதிகரித்திருக்கிறது. எனவே ரசிகரக்ள் டிக்கெட்டை ஆர்வத்தோடு புக் செய்துவருகின்றனர்.
முதலில் வெளிநாடுகளில் தொடங்கிய டிக்கெட் புக்கிங்கில் பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகிவிட்டன என கூறப்பட்டது. அதேநிலைதான் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி யூனோ ஆக்வா கேர் என்ற நிறுவம் பெங்களூரு, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் இருக்கும் தன்னுடைய கிளைகளுக்கு ஜெயிலர் படத்தை முன்னிட்டு விடுமுறையும் அளித்துள்ளது.
இப்படி சாமானியர்கள், முதலாளிகள் ஒருபக்கம் ஜெயிலருக்காக காத்துக்கொண்டிருக்க திரைத்துறை பிரபலங்களும் ஜெயிலர் ஃபீவரில் இருக்கின்றனர். ட்ரெய்லரை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் நடிகர் தனஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது ஜெயிலர் வாரம்’ என மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார்.
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரச்னையில் இருக்கிறது. நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க இருக்கிறோம் என சில வருடங்களுக்கு முன்னதாக அறிவித்தனர். ஆனால் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
It’s JAILER week 😁😁😁
— Dhanush (@dhanushkraja) August 7, 2023
இதற்கிடையே இரண்டு பேரையும் மீண்டும் இணைத்து வைக்க ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தனுஷின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் பிரச்னைலாம் அப்புறம் இருக்கட்டும் முதலில் ரஜினியின் ரசிகன் நான் என்பதை தனுஷ் இந்த ட்வீட் மூலம் உணர்த்திவிட்டதாக இரண்டு பேரின் ரசிகர்களுமே சிலாகித்து கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர்.





