அஜித்குமார் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். ரெஜினா அர்ஜுன் ஆரவ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதன் முன்பதிவு ஆன்லைனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் காலை 9 மணி காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான தமிழக அரசின் அனுமதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருப்பதால், அஜித் ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களிலேயே அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி இது ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் தான் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதிலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. பிரசன்னா அர்ஜுன் தாஸ் யோகி பாபு பிரபு உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரிலேயே அது எப்படிப்பட்ட திரைப்படம் என்பது தெரிய வந்தது.
இதற்கு முன்பு யாரும் பார்த்திராத வகையில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தார் அஜித்குமார். உடல் முழுவதும் டாட்டு, கலர் கலர் சட்டை என அவருடைய லுக்கே பயங்கரமாக இருந்தது. இந்த திரைப்படத்திற்காக அவர் உடல் எடையையும் குறைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
அதேசமயம் பின்னணி இசையை கவனித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இப்படியான சூழலில் தான் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், தீனா படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறாராம். இதற்கான பணிகளில் ஜீவி பிரகாஷ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் நடனமாட இப்போதே தயாராகி வருகின்றனர்.





