தமிழ் சினிமாவில் கச்சிதமான திரைக்கதை உள்ள படங்களை கொடுத்து, தனக்கென குடும்ப ஆடியன்ஸ்களை சம்பாதித்தவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அவர், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அவரது முதல் திரைப்படமே ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரவழைக்க, பின்னாளில் இவர் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து அட்லி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.
ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே பிற திரைப்படங்களின் காப்பி என்று பலர் கூறி வந்தனர். ஒரு திரைப்படத்தை அப்படியே தழுவி எடுத்துவிட்டு, இயக்கத்திற்கு மட்டும் தன் பெயரை அட்லி போட்டுக்கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் பலர் சாடினர். ஆனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் அட்லி படத்தின் வசூலை பாதிக்கவில்லை.
இந்த நிலையில் பாலிவுட் திரை உலகிற்கு சென்ற இயக்குனர் அட்லி, அங்கு ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் வெளிவந்த எண்ணற்ற திரைப்படங்களின் கலவையாக அது உருவாகி இருந்தது. இந்த முறை அந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் யாரும் வரவேற்கவில்லை. ஆனால் இந்தி திரையுலகில் அப்படி இல்லை.
பலரும் ஜவான் திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடினர். குறிப்பாக ஷாருக்கான் ரசிகர்கள், படத்தில் அவரது கதாபாத்திரத்தை போலவே மொட்டை அடித்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். நயன்தாரா முதல்முறையாக பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் இணைவதாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அட்லி அடுத்ததாக சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் முக்கியமான வேடத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆச்சரியமடைந்துள்ள ரசிகர்கள், அட்லியின் அசுர பாய்ச்சலுக்காக காத்திருக்கின்றனர். அதேசமயம் இது எந்த திரைப்படத்தின் காப்பியாக இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.





