தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்காக படம் எடுக்கும் இயக்குனர்கள் மிகவும் குறைவுதான். ஏனெனில் பெரும்பாலான சினிமா இயக்குனர்களும், நடிகர்களும் ரசிகர்களின் சட்டை பாக்கெட்டுகளை தான் குறி வைக்கின்றனர். மணிபர்ஸ்களை காலி செய்கின்றனர். ஆனால் சில இயக்குனர்கள்தான் படைப்பாளியாக தங்களது படைப்புகளை ரசிகர்களுக்கு தருகின்றனர்.
இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நல்ல இயக்குனராக, படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முதல் படமான மௌனம் பேசியதே, சிறந்த காதல் படமாக இப்போதும் ரசிக்கப்படுகிறது. ராம், பருத்திவீரன் போன்ற படங்களை தந்த அமீர், சமீபகாலமாக அதிக படங்களில் நடித்தும் வருகிறார். குறிப்பாக வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரில் அசத்தி இருந்தார்.
அடுத்ததாக இப்போது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அவருக்கான முக்கிய கேரக்டர் காத்திருக்கிறது. படத்தின் ஹீரோ சூர்யா, தனது கேரக்டரில் நடிக்க மறுத்தாலும், வாடிவாசல் படத்தில் அந்த கேரக்டரில் அமீர் மட்டுமே நடிக்க வேண்டும், அவருக்கான கேரக்டர் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறிவருகிறார். அந்த அளவுக்கு வாடிவாசல் படம் அமீர் பெயரை சொல்லும் படமாக உருவாகப் போகிறது.
இதற்கிடையே கடந்த ஆண்டில் உருவான படம் மாயவலை. இயக்குனர் அமீர் இயக்கிய இந்த படத்தை அமீர் நண்பரான தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தயாரித்திருந்தார். இவர் திமுகவிலும் மிக முக்கிய பொறுப்பில் இருந்தார் என்று கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை போலீசார் கைது செய்த நிலையில், அவரது நண்பரான அமீரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் பரவியது.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய மாயவலை படம், ரிலீஸ் கிடப்பில் போடப்பட்டது. இந்த படத்தை அமீருடன், வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் செல்வா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் 30 நிமிட காட்சி வேற லெவலில் இருப்பதாக அப்போதே பாராட்டப்பட்டது.
இந்த படத்தை அப்போதே பார்த்து பிரமித்துப் போன உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் சாதிக் பாட்சா கைது சம்பவத்தால், அதன்பிறகு ரெட் ஜெயின்ட் மூவிஸ், அதில் இருந்து விலகிக்கொண்டது. அதனால் கிடப்பில் போடப்பட்ட மாயவலை படம், இப்போது மீண்டும் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது மகள் திருமணத்தை சமீபத்தில் நடத்தி முடித்த அமீர், மாயவலை படம் ரிலீஸ் தொடர்பான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் இந்த படம் விரைவில் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





