தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் ஒருவரான ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்த பிளாக் படம் கடந்த 11ம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் படம் தான் பிளாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு இயக்கியிருக்கிறார் டைரக்டர் கே ஜி பாலசுப்ரமணி என்று கூறப்படுகிறது.
திகில் மற்றும் த்ரில் காட்சிகள் நிறைந்த இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் பிளாக் பட வெற்றிவிழா கொண்டாடிய பின், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா கூறியதாவது, வேட்டையன் சூப்பர் ஸ்டார் படம். மேலும் லைகா போன்ற பெரிய நிறுவனங்கள் நிறைய தியேட்டர்களில் வேட்டையன்படத்தை ரிலீஸ் செய்வார்கள்.
எனவே நாங்கள் குறைந்த அளவிலான எண்ணிக்கையில்தான் தியேட்டர்களில் பிளாக் படத்தை ரிலீஸ் செய்தோம். எங்கள் பட்ஜெட்டும் அதுதான். சிறிய பட்ஜெட் படம். எனவே எங்களுக்கு கிடைத்த தியேட்டர்கள் எண்ணிக்கை போதுமானதாக இருந்தது. வேட்டையன் படத்துடன் இல்லாமல் வேறு படங்களுடன் ரிலீஸ் செய்திருந்தாலும் இதே போல் குறைந்த அளவிலான தியேட்டர்களில்தான் பிளாக் படத்தை ரிலீஸ் செய்திருப்போம்.
பிளாக் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். நானும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தேன். பிளாக் படம் கமர்சியல் எலமெண்ட் நிறைந்த படம் இல்லை. அதிரடி சண்டைக்காட்சிகள், காமெடி காட்சிகள் இதில் இருக்காது. படத்தின் திரைக்கதை அப்படி தான் உள்ளது. இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இன்னும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்துள்ளது என்று கூறினார்.
படத்தின் நாயகி நடிகை பிரியா பவானி ஷங்கர் ஏன் பிளாக் படத்தின் பிரஸ்மீட் மற்றும் வெற்றி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர் தரப்பில் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, இந்த கேள்வியை நீங்கள் பிரியா பவானி ஷங்கரிடம்தான் போய் கேட்க வேண்டும். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கு வேறு வேலைகள் இருந்திருக்கலாம். சொந்த வேலைகள் ஏதாவது இருந்திருக்கும். அதனால் வர முடியாமல் போய் இருக்கலாம். இந்த சூழல் எனக்குமே ஏற்படும் என்றார்.
ஆனால் பிரியா பவானி ஷங்கர் பிளாக் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் அவர் தனியாக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதனால் தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகர் ஜீவாவுடன் அவருக்கு ஏதாவது கருத்து வேறுபாடு, பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.





