தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான கஜினி ஏழாம் அறிவு ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக விஜய் விஜயகாந்த் சூர்யாவுக்கு ஏஆர் முருகதாஸ் படங்கள் பெரிய அடையாளமாக இருந்தன.
இப்போது இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் பிரமோசன் பணிகளில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இப்போது பிஸியாக இருந்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த போதே நடந்தது. இடையில் சிக்கந்தர் படத்தை இயக்க இந்தி நடிகர் சல்மான்கான் அழைத்ததால் மும்பைக்கு சென்றுவிட்டார் ஏஆர் முருகதாஸ்.
இப்போது சிக்கந்தர் படம் முடிந்துவிட்டதால், இன்னும் சில வாரங்களில் மதராஸி படப்பிடிப்பை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் துவங்க இருக்கிறார். விசாகப்பட்டணத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் சில முக்கிய காட்சிகளை அவர் படம்பிடிக்க உள்ளார். பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இடையில் 2 வாரங்கள் மட்டும் மதராஸி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் கஜினி. இதில் சஞ்சய் ராமசாமி கேரக்டரில் அசினை சூர்யா காதலிப்பார். அசினை வில்லன்கள் கொன்ற பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மறதி நோயால் பாதிக்கப்படும் சூர்யா, வில்லன்களை பழிவாங்குவார். காதல், ஆக்சன் படமாக கஜினி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, மதராஸி படத்தை பொருத்த வரை கஜினி படம் போலவே ஒரு பக்கம் காதல், மறுபக்கம் ஆக்ஷன் என்ற படமாக தான் இருக்கும். ஏப்ரல் மாதம் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பு 20 நாட்களில் முடிவடைந்து விடும். அதன்பிறகு படம் வெளியீடு அறிவிப்பு வரலாம் என்று ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.





