- Advertisement -
Homeபொழுதுபோக்குபா.இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் பேசுவது சாதி வெறி அல்ல.. உரிமை.. சேரன் ஓபன் டாக்

பா.இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் பேசுவது சாதி வெறி அல்ல.. உரிமை.. சேரன் ஓபன் டாக்

- Advertisement -

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அவர் சினிமாவுக்குள் வந்த பிறகுதான் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதாக பலரும் கூறுவதுண்டு. அதேபோல் அவர் தயாரிக்கும் படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் இருக்கும் என்றும் அதை காத்திரமாக பேசக் கூடியவர்களைத்தான் அவர் தேர்ந்தெடுப்பார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

அதேபோல் மாரி செல்வராஜூம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை காத்திரமாக பேசி வருகிறார். அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் வந்த பிறகுதான் தலித்திய சினிமாக்கள் அதிகம் நேர்மையுடன் வர ஆரம்பித்து இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

அதே சமயம் பா ரஞ்சித் மாரி, செல்வராஜ் போன்றோர் தங்களுடைய படங்களின் மூலம் இந்த சமூகத்தில் மேலும் சாதி வெறியை ஊட்டுகிறார்கள் என்ற விமர்சனத்தை அவர்களுக்கு எதிர் தரப்பினர் வைக்கின்றனர். ஆனால் இவர்கள் சாதி வெறியை ஊட்டவில்லை ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை தான் பேசுகிறார்கள் இவர்களை எதிர்ப்பவர்கள் எதற்காக சின்ன கவுண்டர், தேவர் மகன், எஜமான் போன்ற படங்களை எதிர்க்கவில்லை என்ற வாதத்தை இருவரது ஆதரவாளர்களும் வைப்பது வழக்கம்.

சமீபத்தில் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய சக மாணவனை வெட்டிக்கொன்ற கொடூர சம்பவத்திற்கும் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்றோர் எடுக்கும் படங்கள்தான் காரணம் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இவர்களின் படங்கள் குறித்து இயக்குனர் சேரன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

அந்த வீடியோவில் பேசும் சேரன், “பா.இரஞ்சித்தும், மாரி செல்வராஜும் பேசப்படுவதற்கான காரணம் என்னவென்றால் அவர்களது உரிமையை அவர்கள் சத்தமாக பேசுகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கத்தினால்தானே உரிமை கிடைக்கும். கத்தாமல் இருந்ததனால்தானே இத்தனை வருடங்கள் அடக்கி உட்கார வைத்தார்கள். அந்த அடக்குதலிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் நாம் கத்த வேண்டும்.

உரிமைகள் வேறு; சாதி வேறு.இவர்கள் போராடுவது எல்லாம் உரிமைகளுக்காகத்தான் சாதிக்காக இல்லை. அதை மறந்துவிட்டுத்தான் எல்லோரும் சண்டை போடுகிறார்கள். சாதி, மதத்தை கடந்து நாம் எல்லோரும் மனிதர்களாகத்தான் வாழ வேண்டும். அதைத்தான் இவர்களது படங்கள் உணர்த்துகின்றன” என்றார்.

- Advertisement -

சற்று முன்