தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஜாதியம் பேசும் படங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே பல படங்களில் இதுபற்றிய சில காட்சிகளில் நல்ல கருத்துகளை சொல்லி இருக்கின்றனர். எனினும் இன்றைய காலகட்டத்திலும் அத்தகைய ஜாதியம் பேசும் கதைகளை சில இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.
குறிப்பாக இயக்குனர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்களின் படங்களில் அது மட்டுமே கதைக்களமாக உள்ளது. பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை படங்களில் மாரி செல்வராஜ் அதையே சொல்லி இருந்தார். அதே போல் காலா கபாலி மெட்ராஸ் தங்கலான் படங்களிலும் அந்த குறியீடுகளையே அதிகமாக இயக்குனர் பா ரஞ்சித் பயன்படுத்தி இருந்தார்.
ரசிகர்களை பொருத்த வரை இரண்டரை மணி நேரம் நிம்மதியாக சந்தோஷமாக பொழுதைப் போக்க படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமான படங்களை தராமல், நசுக்கிட்டான் பிதுக்கிட்டான் என என்றோ எப்போதோ நடந்த சம்பவங்களை மையப்படுத்தி படங்களை இயக்கி ரசிகர்களை சோதிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்துள்ளது. ஆனாலும் ஜாலியான கலகலப்பான படமாக இருந்ததால் அந்த படம் 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. ஜாதி பேசாமல் இதுபோன்ற படங்களை பார்ப்பதே அபூர்வமாகி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் மேனன். நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சமீபத்தில் அவரிடம் இதுபோன்ற ஜாதியம் பேசும் படங்களை நீங்கள் ஏன் இயக்குவதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் நியாயமானதாகவும், சிந்திக்கும்படியாகவும் இருக்கிறது.
இயக்குனர் கௌதம் மேனன் கூறுகையில், நான் குறிப்பிட்ட படங்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. எனக்கு ஜாதி போன்ற விஷயங்களை கதையாக எடுத்துச் சொல்லி அது இன்னைக்கு இல்லைன்னு தெரிஞ்சும் 80,90 காலகட்டங்களை செட் பண்ணி படம் பண்றதுல எனக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை. அந்த மாதிரி கதைகளை இனி மேலும் சொல்லணும் என்கிற அவசியம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்னைக்கு அதை செட் பண்ண முடியாததால்தான், பழசை எடுத்து பண்ணிட்டு இருக்காங்க, என்று கூறியிருக்கிறார்.





