புரட்சி இயக்குனர் என்று 1980களில் சொல்லப்பட்டவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜயின் தந்தை. இவர் இயக்கிய பல படங்கள் அரசியல் குறித்து வெளிப்படையாக விமர்சித்தவை. இவரது படத்தில் கோர்ட் காட்சிகள் அதகளமாக இருக்கும். கேப்டன் விஜயகாந்துக்கு ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தவை எஸ்ஏசி இயக்கிய படங்கள்தான்.
தனது மகன் விஜயை டாக்டராக்க வேண்டும் என்பதுதான் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் ஆசை. ஆனால் அவர் ஆக்டராக வேண்டும் என்று விரும்பியதால், நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் விஜயை நாயகனாக்கினார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லை. விஜயகாந்துக்கு தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்த பிறகு ஓரளவு கவனம் பெற்றார்.
தொடர்ந்து வழக்கமான காதல் அடிதடி மசாலா படங்களில் நடித்து வந்த விஜய்க்கு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக பாலசேகரன் இயக்கிய லவ்டுடே மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. கில்லி போக்கிரி படங்கள் முன்னணி நடிகராக மாற்றியது.
இப்போது தனது 69வது படமான ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் விஜய், இத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தமிழக அரசியலில் முழுகவனம் செலுத்தப் போகிறார். இதற்கிடையே அவரது மகன் ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்ஏசி போல இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் குதித்திருக்கிறார்.
ஜனநாயகன் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பிஸியாக இருப்பது போல, அவரது மகன் ஜேசன் சஞ்சயும் இப்போது படப்பிடிப்பில் இயக்குனராக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக சந்தீப் கிஷன் நடிக்கும் முக்கிய காட்சிகளை இயக்குனர் ஜேசன் சஞ்சய் படமாக்கி வருகிறார். அப்பா விஜய் சினிமாவை விட்டு செல்லும் அதே நேரத்தில் அவரது வாரிசாக தமிழ் சினிமா களத்தில் ஜேசன் சஞ்சய் குதித்திருக்கிறார். பல வெற்றிப் படங்களை தந்து அப்பா விட்டுச் சென்ற புகழை மகன் தக்க வைத்துக் கொள்வாரா, தளபதியின் வாரிசாக இயக்கத்தில் உச்சம் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர்.





