கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நடிகர் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது வைத்திருந்த நம்பிக்கையே ரசிகர்களுக்கு பொய்த்துப் போனது. பொதுவான சினிமா விமர்சகர்களுக்கு, அவரது படங்களின் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது.
ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் கத்தி, துப்பாக்கி, ரத்தம் என வன்முறை மட்டுமே பிரதானமாக இருக்கும். போதைப்பொருள் கடத்தல் படத்தின் மைய கதையாக இருக்கும். அவர் முதல் படமாக இயக்கிய மாநகரம் படம் தவிர்த்து விக்ரம், மாஸ்டர், லியோ, கைதி உள்ளிட்ட படங்களில் அவர் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் விதமான காட்சிகளை மிக அதிகளவில் வைத்திருப்பார்.
குறிப்பாக கைதி படத்தின் ஆரம்பத்திலேயே, நிறைய போலீஸ் அதிகாரிகள் மது குடித்து விட்டு, மதுவில் கலக்கப்பட்ட போதைப் பொருளால் படம் முழுக்க மயங்கி கிடப்பது போல் காட்டி இருப்பார். அதேபோல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், விஜய் எந்நேரமும் மது குடிப்பது போலவும், போதையில் இருப்பது போலவே காட்டி இருப்பார். விக்ரம் படத்திலும் கமல்ஹாசன் பாட்டில், பாட்டிலாக மது குடித்துக் கொண்டே இருப்பார். லியோ படத்தில் எப்போதும்சிகரட் புகை திரை முழுக்க இருந்தது.
போதை பொருள் இல்லாத சமுதாயம் என்று கூறிக் கொண்டே படம் முழுக்க போதைப் பொருள் கடத்தல், மதுபானம், சிகரட் பயன்பாடு என அந்த விஷயங்களையே காட்டிக் கொண்டிருப்பதுதான் லோகேஷ் கனகராஜின் வழக்கமாக இருக்கிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் போன்ற இன்றைய பல இயக்குனர்கள், பழைய படங்களை பார்த்து அதிலிருந்து கதையை, காட்சிகளை திருடுவது, ஹாலிவுட் படங்களிலிருந்து முக்கிய காட்சிகளை காப்பியடிப்பது தொடர்ந்து நடக்கிறது. தமிழ் சினிமாவை தாண்டி பிற மொழி படங்களை பார்க்காத தமிழக ரசிகர்களை ஏமாற்றுவதுதான் இவர்களது வேலை.
லியோ படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படும் லோகேஷ் கனகராஜ், ரஜினி நடிக்கும் கூலி படத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். 4 மாதங்களாக பெசன்ட் நகரில் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வாடகையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜூக்கு, லக்ஷரி சூட் ரூம் போட்டு கொடுத்தது. ரஜினி படத்தின் கதையை ஸ்கிரிப்ட் எழுத இப்படி ஒரு வசதியை செய்து தந்தது.
ஆனால் 4 மாதங்களாக அந்த சொகுசான சூட் ரூமில் இருந்து கொண்டு ரஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும் என்ற பழைய படத்திலிருந்து அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற அந்த வசனத்தையும், ஏற்கனவே அமிதாப்பச்சன் இந்தியிலும், தமிழில் சரத்குமாரும் நடித்த கூலி என்ற படத்தின் டைட்டிலையும் காப்பியடித்து வைத்திருக்கிறார். இப்படி சொந்த சரக்கே இல்லாத, டைட்டிலை கூட சொந்தமாக யோசிக்காத கற்பனை வறட்சி நிறைந்த டுபாக்கூர் இயக்குனர்களை நம்பி தமிழ் சினிமா மிக மோசமான நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. இதை பார்த்து, சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை என்ன செய்யப் போகிறார்கள் என்றே தெரியவில்லை என்று புலம்பி வருகின்றனர்





