இன்றைய இளம் இயக்குநர்களில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். கார்த்தி, கமல், விஜய், ரஜினிகாந்த் என தொடர்ந்து டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வருகிறார். ரஜினி 171 வது படத்தின் படப்பிடிப்பு, வரும் 2024ம் ஆண்டு, மார்ச் மாத இறுதிக்குள் துவங்கப்பட உள்ளது. நாளை மறுதினம் வியாழன் அன்று விஜய் நடிப்பில், இவரது இயக்கத்தில் லியோ படம் ரிலீஸ் ஆகிறது.
லோகேஷ் கனகராஜ், தனது முதல் படமான மாநகரம் பேசப்பட்ட படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து கைதி படத்தை இயக்கினார். அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படம், அதையடுத்து, கமல் நடித்த விக்ரம் படத்தை இயக்கி, மாஸ் டைரக்டர் என்பதை நிரூபித்தார். 56 இரவுகளில் படமாக்கப்பட்ட கைதி படம், பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் பாடல்களும் இல்லை, கதாநாயகியும் இல்லை என்பதோடு, பகலில் அரைமணி நேரம் மட்டுமே கைதி படத்துக்காக படப்பிடிப்பு நடந்துள்ளது.
லியோ படத்தை அடுத்து, ரஜினி 171 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து விக்ரம் 2, கைதி 2, லியோ 2 படங்களை இயக்கவும் ரோலக்ஸ் கேரக்டர், இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்கள் என, மொத்தம் 10 படங்களை மட்டுமே இயக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இப்படி சக்சஸ்புல் டைரக்டராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ், பத்து படங்களுடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விடுவேன் என கூறியதை டைரக்டர் மணிரத்னம், டைரக்டர் ஷங்கர் போன்றவர்கள், லோகேஷ் கனகராஜிடம் அப்படி சொல்லக் கூடாது. நீங்கள் தமிழ் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். எனினும் பத்து படங்கள்தான் என்ற இலக்குடன் லோகேஷ் கனகராஜ் மனதில் இருப்பது நேர்காணல் ஒன்றில் தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, இதுவரை நான்கு படங்கள் செய்திருக்கிறேன். ரஜினி படம் எனது 5வது படம். இன்னும் 5 படங்கள் செய்யும்போது, எனது சினிமா வாழ்க்கை பயணம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கடந்துவிடும். எனக்கும் வயது 40களை கடந்துவிடும் என்று நினைக்கிறேன். இப்போது ஆக்ஷன் சப்ஜெக்ட் நிறைந்த படங்களை தமிழ் சினிமாவில் ரசிக்கின்றனர். ஒரு கட்டத்துக்கு பிறகு, இந்த படங்களின் டிரண்ட் மாறிப்போகும்.
நான் 10 படங்களை எடுத்து முடிக்கிற நேரத்தில், என்னைப்போல வேறு புதிய இயக்குநர்கள் வந்து, அவர்கள் புதிய சினிமா டிரெண்டை துவக்கி வைப்பார்கள். எனவே, அவர்களுக்கு வழிவிடும் விதமாக நான் ஒதுங்கிக்கொள்வதே சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, சினிமாவுக்கு பிறகு, எனக்கான ஒரு வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்புகிறேன். வேறு புதிய விஷயங்களில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதனால்தான் 10 படங்கள் என்பதை இலக்காக வைத்திருக்கிறேன், என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





