தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக மிஷ்கின் பார்க்கப்படுகிறார். சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தவர். அவரது படங்கள் என்றாலே, அதை ரசிப்பதற்கு என்று தனியாக ரசிகர் கூட்டம் இருக்கிறது.
திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி, நடிகராகவும் மிஷ்கின் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். நந்தலாலா, சவரக்கத்தி, மாவீரன், லியோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர். இந்த ஆண்டு அவரது தம்பி இயக்கத்தில், மிஷ்கின் இசையில் வெளியான டெவில் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ராதிகா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள சின்ன பட்ஜெட் படமான தி புருஃப் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பல விஷயங்களை வெளிப்படையாக பேசி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதே நேரத்தில் சர்ச்சையாகவும் பேசி பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அந்த விழாவில் டைரக்டர் மிஷ்கின் பேசியதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் மிகப்பெரிய படமாக வரும். அந்த படத்தின் கதையை வெற்றிமாறன் சொன்னதும் நான் மிரண்டு போய் விட்டேன். சிறந்த நடிகரான சூர்யா வாடிவாசல் படத்துக்கு லெஜண்டாக மாறிவிடுவார் என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய மிஷ்கின், சிவனைப் பார்த்து இருக்கீங்களா, என்றைக்காவது சிவனை பாத்து இருக்கீங்களா, என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் நான் சிவனை பார்த்திருக்கிறேன், கோவில் உங்களுக்கு எதுவும் தராது. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டும், உணர்ச்சிகரமான படங்களை பார்த்து அழுது கொண்டும் கொண்டாட்டத்துடன் பார்க்கலாம் என்று பேசி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இனிமேல் உங்களுக்கு சந்தோஷம் வேண்டும் என்றால் கோவிலுக்கு போகாதீர்கள். சினிமா தியேட்டர்களுக்கு போங்கள் என இயக்குனர் மிஷ்கின் பேசியிருப்பதை ட்ரோல் செய்துள்ள நெட்டிசன்கள், கோவிலுக்கு போனால் மன நிம்மதி கிடைக்கும். சினிமா தியேட்டர்களுக்கு சென்றால், ரத்தம், கத்தி, துப்பாக்கி, போதை பொருள் கடத்தல் என பிபி தான் எகிறும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.





