எப்போதுமே நடிகர்கள் இயக்குனர்களாகி விட்டால் வெற்றி பெறுவார்களா, என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இயக்குனர்கள் நடிகர்களாக மாறினால் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுகின்றனர். அவர்களை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பல கேரக்டர்களை நடிக்க வைத்த இயக்குனர்கள், கேமரா முன்பு அனாயசமாக நடித்து எளிதாக ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக இயக்குனர்களாக இருந்த நடிகர்களாக மாறிய பாரதிராஜா கே பாக்யராஜ் டி ராஜேந்தர் பார்த்திபன் பாண்டியராஜன் மணிவண்ணன் ராம் அமீர் சுந்தர் சி சேரன் செல்வராகவன் கௌதம் மேனன் கேஎஸ் ரவிக்குமார் மிஷ்கின் என பலரை சொல்லலாம். அதே நேரத்தில் நடிகர்கள் இயக்குனர்களாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இல்லை.
இந்த வரிசையில் இயக்குனர் மிஷ்கின் நடிகராக ரசிகர்களின் மனதை வென்றவர். ஆரம்பத்தில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே துப்பறிவாளன் பிசாசு சைக்கோ என பல படங்களை இயக்கினார்.
அதே நேரத்தில் இயக்குனர் ராம் நாயகனாக நடித்த சவரக்கத்தி படத்தில் மிஷ்கின் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். நந்தலாலா படத்திலும் மனநலம் தவறியவராக மிஷ்கின் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் அரசியல்வாதியாக வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் கல்லூரி முதல்வர் கேரக்டரில் மிஷ்கின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அந்த படத்தின் அபார வெற்றிக்கு மிஷ்கினின் பக்குவப்பட்ட அந்த நடிப்பு பெரிய பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மீண்டும் நடிகராகவே தன் பயணத்தை தொடரும் முடிவுக்கு இயக்குனர் மிஷ்கின் இப்போது வந்துவிட்டார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரெயின் மற்றும் பிசாசு 2 ஆகிய 2 படங்களும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் ஆகாததால் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில் வீரமே வாகை சூடும் படத்தின் இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் மிருகம் பட நடிகர் ஆதி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு டிஸ்கோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் கமிட்டாகி இருக்கிறார். படத்தில் நடிக்க மிஷ்கின் என்ன சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





