சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே நந்தலாலா துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். மேலும் நந்தலாலா என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்தும் இருந்தார்.
வித்யாசமான கதைக்களத்தில் படங்களை தருவதில் இயக்குனர் மிஷ்கின் ரசிகர்களின் அதீத கவனம் பெற்றவர். குறிப்பாக இவரது இயக்கத்தில் துப்பறிவாளன் சைக்கோ படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. துப்பறிவாளன் படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் திரில்லர் படமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
அதே போல் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை நித்யா மேனனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் என்ற படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று தகவல் உள்ளது.
இதற்கிடையே நடிகராகவும் மிஷ்கின் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக சவரக்கத்தி லியோ மாவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்திலும் முக்கிய கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். தற்போது பாலா இயக்கத்தில் வெளியாகி உள்ள வணங்கான் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் நடிகர் ஜெயம் ரவி டைரக்டர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதில் இயக்குனர் மிஷ்கினும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், நான் இதுவரை நித்யா மேனன் நடித்த எந்த படத்தையும் பார்க்கவில்லை. அதேபோல் விஷால் நடித்த எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் நடித்த எந்த படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் அவருடனும் பணியாற்றி இருக்கிறேன். அது மாதிரி தான் விஜய் சேதுபதியின் விவசாயி மற்றும் மாமனிதன் படத்தை மட்டும்தான் பார்த்தேன். இதுதான் என்னுடைய சீக்ரெட் என்று பேசியுள்ளார். அவர் இயக்கிய படங்களில் உதயநிதி நித்யா மேனன் விஷால் நடித்துள்ள நிலையில், அவர்கள் நடித்த படங்களையே பார்த்ததில்லை என்று மிஷ்கின் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விட்டால் நான் இயக்கிய படங்களையே நான் பார்த்ததில்லை என்று சொல்லி விடுவாரோ என்றும் ரசிகர்கள் மிஷ்கினை கலாய்த்து வருகின்றனர்.





