கோலிவுட்டில் தற்போதைய முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் நெல்சன், ஆரம்பத்தில் தனியார் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார். பின்னர் அங்கிருந்து வெள்ளி திரைக்கு நகர்ந்த நெல்சனுக்கு, வேட்டை மன்னன் எனும் திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படம் பாதியில் நின்று போக, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்திற்குள் நுழைந்தார் நெல்சன்.

நயன்தாராவை வைத்து அவர் எடுத்த கோலமாவு கோகிலா என்னும் அந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. தமிழ் சினிமாவில் கதாநாயகி சம்பந்தப்பட்ட கதைகளுக்கு பெரிய மவுசு இல்லை என்னும் விதியை உடைத்து எறிந்த இந்த திரைப்படம், வசூலில் மிகப்பெரிய அளவுக்கு கல்லா கட்டியது.
மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான இந்த திரைப்படத்தில் யோகி பாபுவின் காமெடியால் திரையரங்குகளில் சிரிப்பலை வெடிக்க, கோலமாவு கோகிலா மக்கள் கொண்டாடினர். பின்னர் சிவகார்த்திகேயனுடன் நெல்சன் இணைந்த டாக்டர் திரைப்படமும், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குழந்தை கடத்தல் பின்னணியை, டார்க் காமெடி ரகத்தில் கூறிய நெல்சன் மீண்டும் வெற்றி பெற, டாக்டர் மூலம் சிவகார்த்திகேயனும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார்.

இந்த இரண்டு படங்களின் வெற்றியால் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற நெல்சன், பீஸ்ட் படத்தை உருவாக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வியை சந்தித்தது. உப்புச்சப்பில்லாத திரைக்கதையை கொடுத்த நெல்சனை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள், அவரை இணையத்தில் கேலி கிண்டல் செய்து வந்தனர்.
இப்படியான சூழ்நிலையில்தான் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் என்னும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்து மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பீஸ்ட் படம் கலவையான விமர்சனம் பெற்றது குறித்து பல காரணங்களை அடுக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
“ஒரு ஆறு, ஏழு மாதங்கள் கூடுதலாக காலம் செலவழித்து பீஸ்ட் படத்தை எடுத்திருக்க வேண்டும். நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது முடிவு தவறாகிவிட்டது. நிறைய வி எப் எக்ஸ் பணிகள் இருந்தன. அந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு வேறு இருந்தது. இதனால் நான் நினைத்த மாதிரி படத்தை எடுக்க முடியவில்லை. இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.





