தமிழ் சினிமாவில் நல்ல குடும்ப படங்களை தந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க படம்தான் அவர் இயக்கிய முதல் படம். இதில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து மெரினா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை பாண்டிராஜ் அறிமுகப்படுத்தினார். நடிகர் அருள்நிதி பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் அறிமுகமானார்.
இப்போது விமல் சிவகார்த்திகேயன் அருள்நிதி என 3 பேருமே முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர். இதுதவிர இது நம்ம ஆளு நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இப்போது அவரது இயக்கத்தில் தலைவன் தலைவி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்னைகளால் ஏற்படும் சண்டை சச்சரவுகளை கதைக்களமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் உருவாக்கி இருக்கிறார். இதில் கதாநாயகனாக பரோட்டா மாஸ்டர் கேரக்டரிலும், அவரது மனைவியாக அடிக்கடி சண்டை போடும் கோபக்கார கேரக்டரில் நடிகை நித்யா மேனனும் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் சண்டைக்கோழிகளாக இருக்கும் கண்வன்கள், மனைவிகள் குறித்து ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவன் தலைவி படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யாமேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிறப்பாக பேசிய கணவன், மனைவிகளுக்கு சிறப்பு பரிசுகளை அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது, இந்த படத்தை நான் இயக்கிய போது படப்பிடிப்பில் நானும் விஜய் சேதுபதியும் அவ்வளவு நெருக்கமாக நட்பாக பழகி இருக்கிறோம். ஆனால் என் மனைவியிடம் பேசியது போல் அவரிடம் எல்லா விஷயங்களையும் என்னால் பேச முடியவில்லை. அதே போல் அவரும் என்னிடம் எல்லாவற்றையும் பேசிவிட முடியாது. கணவன், மனைவி உறவுக்குள் மட்டுமே அந்த தனித்தன்மை இருக்கும்.
ஒருமுறை எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்தது. ஆனால் என் மனைவி என்னிடம் எப்போதுமே சண்டையே போடாதவர். அன்று அவர் பேசியதை கேட்டு என்னால் கோபம் தாங்க முடியவில்லை. சாப்பாட்டு தட்டை எடுத்து கீழே வீசி விட்டேன். பிறகு அவர் கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு போகாமல் என் அக்கா வீட்டுக்கு போய், அக்காவை அழைத்து வந்தார். அக்கா என்னை திட்டினார். பசங்க படத்தில் குழந்தைகள் முன்னால் பெற்றோர் சண்டை போடக் கூடாது என்று படம் டைரக்ட் செய்த நானே, என் பிள்ளைகள் முன்னால் சண்டை போட்டதை நினைத்து ரொம்பவும் வருத்தப்பட்டேன், என்று இயக்குனர் பாண்டிராஜ் வருத்தமாக கூறினார்.





