தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர்களாக இயக்குனர்கள் வெற்றிமாறன் பா ரஞ்சித் உள்ளனர். பொல்லாதவன் ஆடுகளம் விசாரணை வடசென்னை அசுரன் விடுதலை விடுதலை 2 உள்ளிட்ட படங்களை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் அவர் படங்களை உருவாக்கி இருக்கிறார். இப்போது சிம்பு நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்ய உள்ளார்.
அதே போல் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படமும் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கபாலி காலா சார்பட்டா பரம்பரை தங்கலான் என படங்களை இயக்கிய பா ரஞ்சித் நீலம் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் மூலம் சொந்தமாகவும் படங்களை தயாரித்து வருகிறார்.
இயக்குனர் விக்ரமன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். அவரது படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இராஜகுமாரன். நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் சந்தானத்துடன் காமெடி காட்சிகளிலும் இராஜகுமாரன் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய தனது படங்களில் நடிகை தேவயானியை கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாகி அந்த நட்பும் நாளடைவில் காதலாக மாறிவிட்டது. விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் ரிலீஸான 10வது நாளில் தேவயானி – இராஜகுமாரன் திருமணம் நடந்துவிட்டது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் இராஜகுமாரன் ஒரு நேர்காணலில் இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதுவரைக்கும் பெரிய டைரக்டர் என்று சொல்கிற வெற்றிமாறனோட எந்த படத்தையும் முழுசா நான் பார்த்தது இல்லை. அவர் படத்துல வர்ற கேரக்டர் எல்லாம் கொடூரமாக இருக்கும். அதனால் எரிச்சலாகி ஒரு ரெண்டு ரீலுக்கு மேல கூட படத்தை பார்க்காமல் முடியாமல் ஆப் பண்ணிடுவேன்.
அதே மாதிரி இயக்குனர் பா ரஞ்சித்தோட அட்டக்கத்தி படத்தை மட்டும்தான் முழுசா பார்த்தேன். அது ஜாலியான ஒரு படமாக இருந்தது. ஆனா அவரோட மத்த படங்களை எல்லாம் பார்த்தது இல்லே. ஏன்னா பாக்கிற அளவுக்கு இல்ல. என்ன சிந்தனையோ தெரியல. அவங்க படம் எல்லாம் கர்ண கொடூரமாக இருக்குது என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





