பொதுவெளியில் எதையாவது கோமாளித்தனமாக செய்து அதன் மூலம் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் தீவிர பக்தரான அவர், எங்கு சென்றாலும் அவரது புகழ் புராணத்தையே பாடுவார்.
எந்த ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், திரையரங்குகளுக்கு சென்று முதல் ஆளாய் பார்க்கும் அவர், ஊடகத்தின் மத்தியில் வித்தியாசமான கமெண்ட் அடித்து வைரல் ஆவார். சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியதற்கு, கூல் சுரேஷ் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.
அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தான் எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கூறுவார். வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என கூல் சுரேஷ் அடிக்கடி கூறும் வசனம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்தப் படத்தின் முதல் காட்சிக்கு அலப்பறையை கொடுத்தார் கூல் சுரேஷ்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருந்தபோது, திரையரங்கிற்கு குதிரையில் வந்து கூத்தடித்தார். இப்படி வித்தியாசமான கெட்டப்களை போட்டு வரும் அவர், ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலில் ஆடும் தமன்னா, கிழிந்த உடையுடன் வருவதாகவும், எனவே தனது தங்கைக்கு புதிய ஸ்கர்ட்டை கொண்டு வந்ததாகவும் கூறி சலிப்பூட்டினார்.
சமீபத்தில், தனியார் யூடியூப் சேனலுக்கு நடுக்கடலில் பேட்டி கொடுத்த அவர், திடீரென படகில் இருந்து குதித்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டார். இது மட்டுமல்லாமல் மார்க் ஆண்டனி படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், அனகோண்டா பொம்மையை கையில் கொண்டு வந்து, விஷால் சார் உங்களுக்காக தான் இந்த படத்தை பார்க்க வந்தேன் என்று கூறி அதற்கு முத்தமிட்டார்.
இப்படி எப்போதும் மீடியாவின் பக்கத்தை தன் பக்கம் ஈர்த்து வரும் அவர், சமீபத்தில் திரைப்பட வெளியீட்டு விழாவில் செய்த காரியம் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் சரக்கு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், திடீரென அருகில் நின்ற தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்டார். நமக்காக புதிய புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து வரவேற்பு கொடுப்பதால் இப்படி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கூல் சுரேஷின் இந்த செயல் கொஞ்சம் கூட சரியில்லை என அங்கு இருந்தவர்கள் கூறி விட்டு சென்றனர்.





