பெண்களிடம் அவர்களது வயதை கேட்கக் கூடாது, ஆண்களிடம் அவர்கள் வாங்கும் சம்பளத்தை கேட்க கூடாது என்பார்கள். ஏனென்றால் பெண்ணுக்கு அழகும் இளமையும்தான் பெரிய விஷயம். அதனால் தங்களது வயதின் ரகசியத்தை அவர் வெளியிட விரும்ப மாட்டார்கள். அதே போல் சம்பளம் ஒரு ஆணின் இமேஜாக இருப்பதால் பலரும் தங்களது சம்பளம் குறித்து சொல்ல விரும்ப மாட்டார்கள்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. குறிப்பாக அவர் இயக்கிய செம்பருத்தி படம் மூலமாக தான் நடிகை ரோஜா அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகியாக மாறிய அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணி நடிகை ரோஜா இடையே காதல் மலர்ந்தது. பிறகு திருமணமும் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்த ரோஜா பிறகு ஆந்திராவில் அரசியல் களத்தில் குதித்தார். எம்எல்ஏ மற்றும் அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் இப்போது கட்சி நடவடிக்கைகளில் மட்டுமே ரோஜா கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெப்சி அமைப்பின் தலைவராக உள்ள இயக்குனர் ஆர்கே செல்வமணி, தொடர்ந்து தமிழ் சினிமாவில் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் படங்களை இயக்குவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெப்சி பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார். சமீபத்தில் அவரது கேப்டன் பிரபாகரன் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, நான் பணம் சம்பாதித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் போட்டு இருக்கிற டிரஸ்ல இருந்து கார்ல இருந்து காருக்கு டீசல்ல இருந்து எதுவும் என் பணம் இல்லை. என் மனைவியோட பணம்தான்.
இதை நான் சொல்வதற்கு வெட்கப்படலே. ஆனா அதே மரியாதையோட வீட்டுல இன்னும் இருக்கேன். அதுக்கு காரணம் என் மனைவி ரோஜாவோட அன்பும் புரிதலும் தான் காரணம் என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற புருஷன்களுக்கே மரியாதை தராத பொண்டாட்டிகள் உள்ள இந்த உலகத்துல ஆர்கே செல்வமணி ரொம்பவும் அதிர்ஷ்டக்காரர்தான் என்று ரசிகர்கள் அவரை பாராட்டுகின்றனர்.





