இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இது கேப்டன் நடித்த 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபிணி ரம்யாகிருஷ்ணன் சரத்குமார் லிவிங்ஸ்டன் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது 34 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் கேப்டன் பிரபாகரன் நேற்று ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் கேப்டன் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில்தான் மன்சூர் அலிகான் வீரபத்ரன் என்ற கேரக்டரில் வில்லனாக அறிமுகமானார்.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படம் குறித்த சுவாரசியமான தகவல்களை பெப்சி தலைவர், இயக்குனர் ஆர்கே செல்வமணி ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். இதுபற்றி ஆர்கே செல்வமணி கூறியதாவது, விஜயகாந்த் அவரது மனைவி உற்றார் உறவினர்களை விட அதிக நேசித்த ஒரு நபர் என்றால் அது அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை தான்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் கதையை விஜயகாந்த் சாரிடம் நான் சொல்லும் போது, என்ன செல்வமணி இது சப்புன்னு இருக்கு என்று சொன்னார். அருகில் இருந்த இப்ராஹிம் ராவுத்தர்தான், இது ரொம்ப கரெக்டா இருக்கும் அப்படீன்னு ஒரே வார்த்தையில் ஓகே பண்ணிட்டார். படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. புலன் விசாரணை கதை சொல்லும் போதும் விஜயகாந்த் சார் ராவுத்தர் கிட்ட ஒரு தடவை கதை சொல் என்றார். தனது நண்பர் மீது அவ்வளவு நம்பிக்கை கேப்டன் வைத்திருந்தார்.
யாருக்கும் தீமையே பண்ணாத நபர் என்றால் அது விஜயகாந்த் தான். எங்க அப்பாவை நினைச்சா கூட எனக்கு அவ்வளவு ஃபீல் ஆகாது. ஆனால் விஜயகாந்த் சாரை நினைச்சா என் கண்ணுல தண்ணி வரும். கேப்டன் பிரபாகரன் படம் பண்ணும் போது அதற்கு முன் விஜயகாந்த் சாருக்கு 9 படங்கள் ஓடவில்லை. அதனால் இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று எல்லோரும் சொன்னார்கள்.
விஜயகாந்த் இடத்தில் வேற யாராவது இருந்தால் கண்டிப்பாக என்னை தூக்கிப்போட்டு இருப்பாங்க. இடையில் 3 மாதம் படம் நின்னு போச்சு. வேற டைரக்டரை வச்சு படம் எடுக்கலாமா என்று சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் சார் தான் ஒரு பையன் வாழ்க்கையை நாம கெடுக்கக் கூடாது. எப்படியாவது பண்ணி படத்தை முடிச்சிடுவோம் என்று சொன்னார். அது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ் ஆகியிருக்கு. நிச்சயமா இன்னைக்கு வர படங்களை விட இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





