சினிமா பிரபலங்கள் அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கேரளாவில் அடிக்கடி இது நடக்கிறது. இதே போல் பாலிவுட் சினிமாவிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக உள்ளன. தெலுங்கிலும் இது சார்ந்த புகார்கள் அடிக்கடி வருகின்றன.
ஆனால் தமிழ் சினிமாவை பொருத்த வரை இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில் பெரிய அளவில் இருப்பதில்லை. ஏனெனில் இங்கு நடிகைகளுக்கு நல்ல மரியாதை மதிப்பு உரிய அங்கீகாரம் தரப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றனர்.
மலையாளத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படம் வெளியாகி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் கதை கொடைக்கானலுக்கு ஒரு நாள் பிக்னிக் வரும் இளைஞர்களை பற்றியது. 12 பேர் கொண்ட குழுவில் ஒருவர் பாதாளத்தில் விழுந்துவிட அவரை மற்ற நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றுவதுதான் கதை.
இந்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் டைரக்ட் செய்து இருந்தார். கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. ஏனெனில் இதில் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்கள் தமிழிலும் பேசியது. கொடைக்கானலில் உள்ள குணா குகை என்ற இடத்தில் தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக படத்தின் இறுதி காட்சியில் கண்மணி அன்போடு பாடல் ஒலித்து படத்துக்கு பெரிய அளவில் வைப் சேர்த்தது. அதனால் நடிகர் கமல்ஹாசன் மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பெண் போலீஸில் நேற்று பாலியல் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து சிதம்பரம், தகாத நடத்தையில் தன்னிடம் ஈடுபட்டதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் இயக்குனர் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கேரளம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





