சினிமா, மனித மனங்களை அந்த காலம் முதல் இந்த காலம் வரை, ஆட்சி செய்கிற ஒரு விஷயமாக இருக்கிறது. சினிமா என்ற ஒளிவழி ஊடகம் ஒன்று இல்லாமல் போயிருந்தால், மக்களிடம் இவ்வளவு விழிப்புணர்வு, வளர்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தைரியமாக சொல்லலாம். இன்றைய சமூக மாற்றங்களுக்கு வித்திட்டது, சிந்தனை மிக்க புத்தகங்களும் நல்ல திரைப்படங்களும் தான்.
ஆனால், எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமாகவே இருந்தாலும் அதுவும் நஞ்சுதான். அப்படித்தான் சினிமாவும். நல்ல சமுதாய கருத்துகளை சொல்லிக்கொண்டிருந்த தமிழ் சினிமா, இன்று வன்முறை, கலவரம், சண்டைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
அதைவிட ரசிகர்களை சோதிக்கிற வகையில், ரயில் பெட்டி நீளம் போல, நீண்டுகொண்டே போகும் காட்சி அளவின் நீளம். 50 ஓவர் காலம் மாறி, 20 ஓவர் கிரிக்கெட் வந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. விறுவிறுப்பான கிரிக்கெட் விளையாட்டை கூட நீண்ட நேரம் பார்க்க, ரசிகர்கள் விரும்புவதில்லை. அதுபோல், மொக்கை படங்களை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது.
அப்படிப்பட்ட சூழலில், இன்று எடுக்கப்படும் படங்களின் நீளம், தியேட்டர்களில் ரசிகர்களை உட்கார விடாமல் நெளிய வைக்கிறது. ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில், படத்தை சட்டென முடிக்காமல் இழுத்துக்கொண்டே போவதால், ரசிகர்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடுகிறது. இது போதாதென்று, ஒரே படத்தை 2 பாகங்களாக எடுத்தும், ரசிகர்களை சோதிப்பதும் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது.
அந்த காலத்தில் நாடோடி மன்னன் நீண்டநேரம் ஓடும் படமாக இருந்தது. அதன்பிறகு 1980களில் இரண்டரை மணி நேரம் என்பது, 1990களில் இரண்டே கால் மணி நேரமானது. அதில் இருந்து 10 நிமிடங்கள் வரை கூடுவது, குறைவது சகஜமாக இருந்தது. ஆனால், இப்போது இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு மேல் படத்தை எடுத்து, ரசிகர்களை சில இயக்குநர்கள் பாடாய்படுத்தி விடுகின்றனர்.
சேரனின் தவமாய் தவமிருந்து, 3 மணி, 24 நிமிடம், வாரிசு 2 மணி, 47 நிமிடம், லியோ 2மணி 44 நிமிடம், ஜெயிலர் 2 மணி, 48 நிமிடம், இனி வரப்போகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 மணி 52 நிமிடம் என இப்படி படத்தின் நீளம் அதிகரிக்க, அதிகரிக்க பாதிக்கப்படுவது ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர் ஓனர்களும்தான். ரசிகர்களிடம் இருப்பது மதிப்புமிக்க பொன்னான நேரம். அதை செலவழிக்க, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு வருகின்றனர். இன்னும் அவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டுமா, என்பதை யோசித்து இயக்குநர்கள் படத்தை இரண்டே கால் மணி நேரத்தில் முடித்தால் நன்றாக இருக்கும்.





