தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் சசிக்குமார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா அமீர் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சசிகுமார். அதன்பிறகு சுப்ரமணியபுரம் என்ற படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்த நாடோடிகள் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுந்தரபாண்டியன் புலிக்குட்டி தாரை தம்பட்டை ஈசன் பேட்ட அயோத்தி என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நடிகர் சசிகுமார் இப்போது வதந்தி 2 என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சசிகுமார் இயக்கிய நடித்த படங்களில் சுப்ரமணியபுரம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்ற ஒரு படமாகும். இந்த படத்தை சசிகுமார் எழுதி இயக்கி அவரே தயாரித்தும் இருந்தார். மேலும் இந்த படத்தில் பரமன் என்ற கேரக்டரில் சசிக்குமார் நடித்திருந்தார். அவருடன் அழகர் என்ற கேரக்டரில் நடிகர் ஜெய் இணைந்து நடித்திருந்தார்.
மதுரை கதைக்களத்தை பின்னணியாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வேலை இல்லாத நண்பர்கள் குழு வன்முறை துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றில் சிக்கிக் கொள்வதை மையப்படுத்தி இந்த படத்தின் கதை இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 56வது பிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த தமிழ் இயக்குனர் உள்ளிட்ட 3 விருதுகளை வென்றது.
இதனால் சுப்ரமணியபுரம் படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. மீண்டும் இந்த படம் 2ம் பாகமாக திரைக்கு வருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் கூறியதாவது, சுப்ரமணியபுரம் 2 படத்தை மீண்டும் நான் இயக்கவில்லை. எல்லோரும் அதன் 2வது பாகத்தை எடுக்கச் சொல்லி தான் வந்தார்கள்.
ஆனால் அந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த வரவேற்பை கெடுக்க நான் விரும்பவில்லை. அதனால் எப்போதும் சுப்ரமணியபுரம் படம் 2ம் பாகம் இயக்கும் திட்டம் இல்லை என்று இயக்குனர் சசிகுமார் தெளிவுபடுத்தி உள்ளார். பெரும்பாலான 2ம் பாகமாக வெளிவரும் படங்கள் தோல்வியை சந்திப்பதும் குறிப்பிடத்தக்கது.





