தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும், அடுத்ததாக வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தனது முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி பலராலும் கவனிக்கப்பட்டார். அன்று தொடங்கி இன்று வரை தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்காத தனுஷ், தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உச்சநட்சத்திரமாக திகழ்கிறார்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டன. வெற்றிமாறனின் திறமையான இயக்கத்தால் தனது நடிப்புக்கு முழு தீனி போட்டுக் கொண்ட தனுஷ், பலராலும் அறியப்பட்ட கலைஞர் ஆனார். இதில் ஆடுகளம் திரைப்படத்திற்கும், அசுரன் திரைப்படத்திற்கும் மத்திய அரசின் தேசிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.
நடிகர் என்ற ஒரே போர்வையில் இருந்த தனுஷிற்கு, பாடகர் மற்றும் பாடலாசிரியர் பட்டங்களை தேடி வந்து கொடுத்தது 3 திரைப்படம். அந்தப் படத்தில் அவர் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடிக்க, இணைய தளங்களில் வேகமாக தேடப்பட்டார் தனுஷ். மயக்கம் என்ன திரைப்படத்தில் அவர் எழுதிய பிறை தேடும் நிலவினில் பாடலும் தனுஷை கவிஞராக்கியது.

இதன்பிறகு திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்த தனுஷ், பவர் பாண்டி திரைப்படத்தை எடுத்தார். ராஜ்கிரண் முதன்மைகதாபாத்திரத்தில் நடித்து வெளியான இந்த திரைப்படம், முதியோர்களின் மனதில் புதைந்திருக்கும் சிறு வயது காதலை உணர்ச்சிபூர்வமாக காண்பித்து ஆனந்த கண்ணீரை ஏற்படுத்தியது.படத்தின் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, இயக்குனராக சபாஷ் போட வைத்தார் தனுஷ்.
இதன் நடுவே தனது வொன்டர்பார் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கவும் செய்தார். எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரவுடிதான், தங்க மகன், விசாரணை, காலா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷின் தயாரிப்பிலேயே வெளியாகின. கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், திரையுலகில் தனது 50 வது படத்தை எட்டி இருக்கும் தனுஷ், அதைத்தானே இயக்கவும் செய்கிறார்.
முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இதற்காக சென்னையில் 600 வீடுகள் கொண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது வரை தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், அண்மையில் திருப்பதியில் மொட்டை போட்டதால் கொஞ்சம் முடி வளர்வதற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் 50வது படம் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களின் அறிவிப்பு, தனுஷின் பிறந்தநாளான 28ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.





