தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் விதமான நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். மற்ற இயக்குனர்கள் கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை படங்களை தரும்போது செல்வராகவன், வெற்றிமாறன், அமீர், சமுத்திரக்கனி போன்ற சில இயக்குனர்கள்தான் வேறுமாதிரியான கதைக்களத்தில் படங்களை இயக்கி தருகின்றனர்.
குறிப்பாக செல்வராகவன் இயக்கிய படங்கள், வேறு விதமான கதைக்களத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கின்றன. உதாரணமாக புதுப்பேட்டை, 7 ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதில் ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களை 2ம் பாகமாக விரைவில் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார்.
செல்வராகவன், அவ்வப்போது தனது மனதில் தோன்றும் சில விஷயங்களை, தன்னை பாதித்த நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை செய்து வருகிறார். சினிமா சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அவரது கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வைரலாகி வருகின்றன. சமீப காலமாக செல்வராகவன் படங்களை இயக்குவது மட்டுமின்றி நடிக்கவும் செய்கிறார். தனது தம்பி தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். ராயன் படம் பார்த்துவிட்டு, இன்று தனுஷ் உள்ளிட்டோரை பாராட்டியும் இருந்தார்.
இப்போது, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் செல்வராகவன் அதில் கூறியிருப்பதாவது, நாம் பிறக்கும்போதே கை, கால், தலை போலவே நம் உடலுடன் இன்னொரு விஷயமும் சேர்ந்தே பிறந்திருக்கிறது. அதுதான் பொறாமை. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதைப் பார்த்து பொறாமை, பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதைப் பார்த்து பொறாமை. ஆபிஸில் ஒருவருக்கு பிரமோசன் வந்தால் அதைப் பார்த்து பொறமை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரி, உங்கள் உடல் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கும். இதில் பொறாமை இல்லாமல் எப்படி வாழ்வது என்று கேட்டால் வாழவே முடியாது. இதற்கு தீர்வோ, மருந்தோ கிடையாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதன் பவர் அதிகரித்துக்கொண்டே போகும்.
அதனால் பொறாமையை கண்ட்ரோல் பண்ண நினைத்தால், அது அதிகமாகிக்கொண்டே போகும். அதோட பவரும் ஜாஸ்தியாகி விடும். அதனால் பொறாமையை வாழ்க்கையில் ஒரு பகுதியாக நினைத்துக்கொள்ளுங்கள். ஆமாம், பொறாமைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய முடியும் என்று வேலையை கவனிக்க ஆரம்பித்தால், நாளடைவில் அந்த பொறாமை நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகி, மேஜிக் போல குறைந்து, மறைந்து போய்விடும் என்று அதில் கூறியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.





