தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் அமோக ஆதரவை பாராட்டுகளை பெற்று வருபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் முதல் இந்தியன் 2 படம் வரை ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. இதில் ரஜினி கமல் விஜய் அர்ஜூன் விக்ரம் சித்தார்த் பிரசாந்த் என பல நடிகர்களுக்கு இமேஜ் வேற லெவலில் உயர்ந்திருக்கிறது.
ஷங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டமும் இருக்கும், விழிப்புணர்வு நிறைந்த சமுதாய கருத்துகளும் இருக்கும். யதார்த்தத்தை மீறிய காட்சிகளாக இருந்தாலும் ஒரு திரைப்படமாக அதை ரசிகர்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். ஜாலியான படங்களாகவும் இருக்கும், அதே நேரத்தில் குடும்பத்துடன் ரசிக்கும் படங்களாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை தமிழ் பட ஹீரோக்களை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் இந்த முறை, தெலுங்கு பக்கம் சென்றிருக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவரும் இவர்தான்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் கலெக்டராக அப்பா மகன் என்ற 2 வேடங்களில் நடித்துள்ளார். நடிகைகள் அஞ்சலி கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ளனர். இதில் அரசியல்வாதி கேரக்டரில் வில்லனாக எஸ்ஜே சூர்யா, முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி கேம் சேஞ்சர் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் சில வாரங்களாக கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தில்ராஜூ ஷங்கர் ராம் சரண் எஸ்ஜே சூர்யா ராஜமவுலி என ஒரு நட்சத்திர கூட்டமே படத்துக்கான பிரமோசன் பணிகளை பரபரப்பாக செய்து வருகிறது. நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாண் போன்றவர்களும் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். நாளை சென்னையில் நடக்கும் பிரமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் பட பிரமோசனில் கலந்துக்கொண்டு பேசும் இயக்குனர் ஷங்கர், மேடைக்கு மேடை இது முழுக்க முழுக்க நேரடியான தெலுங்கு படம். தமிழ் மற்றும் இந்தி வெர்ஷனிலும் வருகிறது என்ற உண்மையை குறிப்பிட்டு பேசி வருகிறார். தெலுங்கு படம்தான் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் இந்த படம் அதற்கான கோணத்தில் வெற்றி பெறும். தமிழ், இந்தி படமாக பார்த்தால் இந்த படம் வேறு மாதிரியாக தோன்றி விடும். பல படங்கள் அப்படிதான் பிளாப் ஆகி விடுகின்றன என்பதால், கேம் சேஞ்சர் நேரடி தெலுங்கு என்பதை தொடர்ந்து ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





