நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தனது 69வது படத்துக்கு அவர் ரூ. 250 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் சினிமாவில் உச்சநிலையில் இருக்கும் விஜய், அரசியல் களத்தில் குதிக்கிறார். 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவதே அவரது லட்சியமாக இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் சில படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக சுறா, ஆதி, லியோ, புலி, குருவி, மதுர, வாரிசு, பீஸ்ட் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.
ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற நடிகர்களின் படங்கள், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் பெரிய ஸ்டார் நடிகர்களாக இருப்பதால் அவர்கள் வசூல் ரீதியாக பட்ஜெட்டை கடந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் நடித்த படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தருவதில்லை.
அதன் காரணமாகவே, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அவர்கள் கமிட் செய்யப்படுகின்றனர். தோல்வி படங்களாக இருந்தும் அவை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தராத படங்களாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஆனால் சில படங்கள் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்திருக்கின்றன.
குறிப்பாக விஜய் நடித்த புலி படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய இந்த படம், பலத்த ஏமாற்றத்தை தந்தது. விஜய், பிரபு, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்போது யோகிபாபு நடித்த போட் படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்புதேவன் கூறுகையில், புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் நன்றாகவே செய்திருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளால் படம் வெளியானதும் கடும் விமர்சனங்களை சந்தித்தது என்று கூறியிருக்கிறார். இம்சை அரசன் போலவே, இந்தபடமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவர, படம் தவறிவிட்டதாகவும் சிம்புதேவன் கூறியிருக்கிறார்.





