சிறுத்தை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்தடம் பதித்தவர் சிவா. கார்த்தி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரத்னவேல் பாண்டியன் எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் கர்ஜித்த கார்த்தி, ராக்கெட் ராஜா கேரக்டரில் திருடனாக நடித்து கலகலப்பூட்டினார். முதல் படத்திலேயே அழுத்தமான வெற்றியை பதிவு செய்த சிவாவுக்கு, சிறுத்தை பெயர் அடைமொழியாக மாற, தமிழ் திரையுலகம் அவரை செல்லமாக சிறுத்தை சிவா என்று அழைத்தது.

இதனைத்தொடர்ந்து விஜயா தயாரிப்பு நிறுவனம், சிவாவுக்கு வாய்ப்பு கொடுக்க, அதில் அஜித் வந்து இணைந்தார். தொடர்ந்து ஸ்டைலிஷான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த அஜித்திற்கு, ஒரு மாறுதல் தேவைப்பட தன்னை வைத்து ஒரு கிராமத்து கதை சார்ந்த படத்தை எடுக்குமாறு அன்பு கட்டளை போட்டார் ஏகே. இதை சரியாக பயன்படுத்திய சிறுத்தை சிவா, வீரம் திரைப்படத்தை எடுத்து அசர வைத்தார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்த வீரம், தன்னை எதிர்த்து போட்டியிட விஜய்யின் ஜில்லாவை ஓரங்கட்டி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.
இதையடுத்து மீண்டும் அஜித்துடன் இணைந்த சிறுத்தை சிவா, வேதாளம் எனும் திரைப்படத்தை எடுத்தார். ஒரு பக்கம் அனிருத்தின் கலக்கலான இசை, மறுபக்கம் அஜித்தின் அந்த டிரான்பார்ம் நடிப்பு என ஒவ்வொரு காட்சியும் ஆக்சன் கலந்து விறுவிறுப்பாக அமைய, சிறுத்தை சிவாவுக்கு இந்த திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா – அஜித் கூட்டணி இணைந்தது. முந்தைய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், ரசிகர்களுக்கு இந்த கூட்டணி மீண்டும் இணைவது சோர்வை ஏற்படுத்தியது. இருப்பினும் அசராமல் இருவரும் பணிபுரிய, சூட்டோடு சூட்டாக வெளியானது விவேகம் திரைப்படம். பல்கேரியாவை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அழுத்தமில்லாத காட்சிகள், ஒட்டாத திரைக்கதையால் படுதோல்வியை சந்தித்தது. ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை விவேகம் கொடுத்ததால், இந்த கூட்டணி இதோடு போதும் என வேண்டுகோள் விடுத்தனர் ரசிகர்கள்.
ஆனால் இதை பொருட்படுத்தாத அஜித்குமார், நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். விஸ்வாசம் என பெயர் வைத்து, தந்தை மகள் பாசத்தை கையில் எடுத்த சிவா அதனை சிறப்பாக திரையரங்குகளில் கொண்டு சேர்த்ததால் பாராட்டப்பட்டார். ரஜினியின் பேட்டயுடன் இறங்கிய இந்த திரைப்படம், வசூல் சாதனை குவித்து பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அண்ணாத்த படத்தை எடுத்த சிறுத்தை சிவா, தற்போது சூர்யாவுடன் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். முந்தைய பிறவிக்கும், தற்போதைய காலத்தையும் மையமாகி வைத்து மிக பிரம்மாண்டமான முறையில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
இதன் கிளிம்ப்ஸ் காட்சி பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பேசிய சிறுத்தை சிவா, கங்குவா திரைக்கதையை முடிக்க நான்கு ஆண்டுகளானதாக கூறினார். அடர்ந்த வனப்பகுதியில் இதன் படப்பிடிப்பை நடத்தியதாகவும், சூர்யா 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்றும் தெரிவித்தார். படத்தில் நிறைய போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகக் கூறிய அவர், படத்தின் சிறப்பான அவுட்-புட்டிற்காக காத்திருப்பதாகவும், அதில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டதும் கங்குவாவின் வெளியீட்டுக்கான தேதி குறித்து தெரிவிப்போம் என்றும் கூறினார்.





