சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஏற்கனவே ரஜினி நடித்த அருணாசலம் படத்தை இயக்கியவர் சுந்தர் சி. கமல் நடித்த அன்பே சிவம் படத்தின் இயக்குனரும் அவர்தான். அதனால் இந்த பெம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தந்தது.
ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக இயக்குனர் சுந்தர் சி அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அந்த படத்தை தான் இப்போது சிபி சக்ரவர்த்தி அல்லது அஸ்வத் மாரிமுத்து என இருவரில் யாரேனும் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சுந்தர் சி இந்த படத்தை இயக்காதது ரசிகர்களுக்கு பெரிய அப்செட்டாக இருந்தது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, உண்மையை சொல்லப்போனால் அந்த படத்தில் எனக்கு அதிகமாக பிரஷர் இருந்தது. என்னுடைய இஷ்டத்துக்கு தான் இத்தனை வருடங்களாக படங்கள் செய்கிறேன். மக்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு தோன்றினால் அதை நான் செய்வேன்.
ஆனால் அதை தயாரிப்பு தரப்பிடமோ அல்லது மற்ற யாரிடமோ சொல்லி புரிய வைக்கக்கூடிய திறமை எனக்கு இல்லையோ எனத் தோன்றுகிறது. என்னுடைய இத்தனை ஆண்டுகளில் எனக்கு கதையே சொல்ல தெரியாது. ஒரு படத்தில் முக்கியமான ஆள் வந்து ஐடியா சொன்னால் நான் கன்வின்ஸ் ஆகிவிடுவேன். இவ்வளவு பெரிய படத்தை செய்யும்போது அது தனி நபர் சார்ந்த முடிவாக இருக்க முடியாது.
எனவே எனக்கு இந்த படத்தில் அதீத அழுத்தம் இருந்தது. எனவே அந்த புராஜெக்ட்டுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை. வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை. அதனால் தான் இந்த படத்தில் இருந்து நான் விலகினேன். ரஜினிகாந்த் கமல்ஹாசன் யாரும் இதற்கு காரணம் இல்லை. இந்த படத்திலிருந்து விலகுகிறேன் என அறிவிக்க போவதாக ரஜினியிடம் சொல்லிவிட்டு தான் அறிவித்தேன்.
எங்கள் மூன்று பேரின் அவுட் லுக்குமே வேறு வேறாக இருக்கும். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். நாம் சேர்ந்து படம் செய்யலாம் என்று தான் ரஜினி சொல்லி இருக்கிறார். இதே மாதிரி நிறைய தடவை எனக்கு நடந்திருக்கிறது. அது வெளியே தெரியவில்லை. அவ்வளவுதான். எனக்கும் ரஜினிக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இந்த கதையை நிச்சயம் நான் செய்வேன் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.





