நடிகர் பிரசாந்த், கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகனாக அசத்திக்கொண்டு இருந்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால், அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் சரிவை சந்தித்தார். அதனால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்ட அவர், தி கோட் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழ் சினிமாவில் மலையூர் மம்பட்டியான், தீச்சட்டி கோவிந்தன், கொம்பேறி மூக்கன், நீங்கள் கேட்டவை போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் தியாகராஜன். அவரது மகன்தான் நடிகர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவை போலவே மகனும் சினிமாவில் கொடி கட்டி பறந்த நிலையில், இப்போது மீண்டும் செகன்ட் இன்னிங்ஸை பிரசாந்த் ஆடத் துவங்கி இருக்கிறார்.
பிரசாந்த் அப்பா தியாகராஜன் டைரக்ஷனில் அந்தகன் என்ற படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோ பாடலை அனிருத், விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.
அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ள நிலையில், அந்தகன் படம் குறித்து படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் கூறியதாவது, கடந்த 2019ம் ஆண்டில் இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் உரிமையை, பலத்த போட்டிகளுக்கு இடையில் நான் வாங்கினேன்.
இந்த படத்தின் நாயகன் ஒரு கலைஞன், பார்வை திறனில் பிரச்னையுள்ள ஒரு மாற்றுத்திறனாளி பியானோ கலைஞன். பிரசாந்த் சின்ன வயதில் இருந்தே பியானோ வாசிப்பான். லண்டன் டிரினிட்டி கல்லூரியில் பியானோ இசையில் 4வது கிரேடில் தேர்ச்சி பெற்றவன். அதனால் பிரசாந்துக்கு இந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும் என்றுதான் இந்த கதையின் தமிழ் உரிமையை வாங்கினேன்.
இந்தி படத்தில் இல்லாத பல விஷயங்களை இந்த அந்தகன் படத்தில் சேர்த்திருக்கிறோம். அதனால் இது இந்தி ரீமேக் படம் அல்ல, ரீமேட் படம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் பெரிய அளவில் பேசப்படும். இந்தி படத்துக்கும், இந்த படத்துக்கும் நிறைய வித்யாசம் இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இது பிரசாந்தின் 50வது படம் என்று அந்தகன் பற்றிய பல அப்டேட்டுகளை கூறியிருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன்.





