சினிமா எந்த அளவுக்கு ரசிகர்களை ஆக்கிரமித்து இருக்கிறதோ, அதே அளவுக்கு டிவி சீரியலும் ரசிகர்களுக்கு மிக மிகப் பிடித்தமானதாக தான் இருக்கிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், இமேஜூம் சீரியல்களுக்கு கிடைத்து வருகிறது. சில சீரியல் நடிகர்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். சில சினிமா நடிகர்கள் சீரியலிலும் நடிக்க வருகின்றனர். சின்னத்திரை வண்ணத்திரை இரண்டிலுமே நடித்தாலும் கலைஞர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைத்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டி ஒலி சீரியல் மூலம், தமிழக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சீரியல் டைரக்டர் திருமுருகன். இவர் தொடர்ந்து நாதஸ்வரம் என்ற மிகச்சிறந்த ஒரு சீரியலை தந்தார். தொடர்ந்து குலவிளக்கு, தேன் நிலவு, கல்யாண வீடு போன்ற சீரியல்களை தந்திருக்கிறார். இவரது ஐந்து சீரியல்களுமே, மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை.
டிவி சீரியல்கள் மட்டுமின்றி மெட்டி ஒலி டைரக்டர் திருமுருகன், சினிமாவிலும் காலடி பதித்தவர். நடிகர் பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களுமே நல்ல படங்களாக ரசிகர்கள் வரவேற்கப்பட்ட படங்களாக அமைந்தன. இந்த படங்களில் வடிவேலு காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக எம்டன் மகன் படத்தில் வடிவேலு – நாசர் காட்சிகள் டிரண்டிங் ஆனவை.
மெட்டிஒலி திருமுருகன் சீரியல்களை பொறுத்த வரை, அவரது கதையும், கதாபாத்திரங்களும், கதைக்களமும் ரசிகர்களை வெகுவாக மனதை ஆக்கிரமித்து விடும். குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் ஐந்து பெண்களை பெற்ற சிதம்பரம் என்ற ஒரு தகப்பனின் வாழ்க்கையை, குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை, பிரச்சனைகளை, மனித சுபாவங்களை, அவர்களுடைய குண அதிசயங்களை மிக அழகாக, கதாபாத்திரங்கள் வாயிலாக அட்டகாசமாக தந்திருப்பார் திருமுருகன்.
அதேபோல் நாதஸ்வரம் சீரியலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலில் மௌலி, பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் பிரதான கேரக்டரில் அற்புதமான நடிப்பை தந்திருந்தனர். அதேபோல் தேன்நிலவு, குலதெய்வம், கல்யாண வீடு என மற்ற சீரியல்களிலும் அவர் சிறப்பாக இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் திருமுருகன். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கல்யாண சீரியலுக்கு பிறகு, திருமுருகன் எந்த சீரியலையும் இயக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று புதிய சீரியல் ஒன்றை இயக்குவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இயக்குனர் திருமுருகன். ஆனால் இந்த முறை அவரது சீரியல் டிவி சேனல் வழியாக ஒளிபரப்பாகாது. தனது யூடியூப் சேனல் வழியாகவே இந்த சீரியல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த சீரியலை திருமுருகன் அறிவித்திருப்பது மிகப்பெரிய சந்தோஷம் கொடுத்தாலும், யூடியூப் சேனலில்தான் வரும் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.





