சில தினங்களுக்கு முன் மத்திய அரசு தேசிய விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகை நித்யாமேனன் ( திருச்சிற்றம்பலம்), சிறந்த இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) என பல விருதுகளை அறிவித்தது. இதில் பொன்னியின் செல்வன் 1 மொத்தம் 4 விருதுகளை பெற்றது.
இந்நிலையில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன், பெருச்சாழி ( மலையாளம்) மற்றும் ஷாட் பூட் த்ரீ ( குழந்தைகள் படம்) ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்பெல்லாம் மத்திய அரசின் தேசிய விருதுகளில் குழந்தைகளுக்கான படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படட்டன. ஆனால் இப்போது அது இல்லை.
குழந்தைகளுக்கான ஒரு நல்ல படத்தை ஜனரஞ்சகமாக கொடுக்க வேண்டும் என் ஷாட் பூட் த்ரீயை பகீரத பிரயத்தனம் செய்து எடுத்து ரிலீஸ் செய்தோம். கொரியா, அட்லாண்டா, கனடா, நேபாளம், பாரிஸ், வேல்ஸ் என்று பல உலக திரைப்பட விழாக்களில் அந்த படம் தேர்வாகி சிறந்த திரைப்பட விருது, நான்கு சர்வதேச விழாக்களில் வென்றது.
நானும் எனது படக்குழுவும் குழந்தைகளுக்கான தேசிய விருதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் மத்திய அரசின் தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தைகளுக்கான பிரிவே இல்லாமல் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது நெஞ்சில் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது.
நான் மட்டுமல்ல, குரங்கு பெடல், கிடா போன்ற குழந்தைகளுக்கான படம் எடுத்த பல இயக்குனர்கள் இதனால் பலத்த ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். அழுத குழந்தைக்குதான் பால் என்பார்கள். எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலை குறித்து அனைவரும் உரத்த கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
ஏற்கனவே வியாபார சந்தையில் குழந்தைகளுக்கான படம் எடுப்பவர்கள், பிழைக்க தெரியாதவர்கள் என்ற பட்டப் பெயர்களுடன் இருக்கின்றனர். இன்று சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கும் காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி, சில ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய படம் ஒன்றுக்கு, சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருது வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





