கமல்ஹாசனின் “இந்தியன்” திரைப்படம் காலத்தை தாண்டியும் கொண்டாடப்படும் திரைப்படம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “இந்தியன் 2” திரைப்படத்தின் பணிகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தில் மூன்று டெக்னீசியன்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து “இந்தியன் 2” படப்பிடிப்பு முடங்கிப்போனது. அதன் பின் கொரோனா ஊரடங்கும் வந்த நிலையில் இத்திரைப்படம் டிராப் என்றே முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த புராஜெக்ட்டிற்குள் நுழைய மீண்டும் “இந்தியன் 2” படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது “இந்தியன் 2” மும்முரமாக உருவாகி வரும் நிலையில் இத்திரைப்படத்தை குறித்த வேறு பல சுவாரஸ்யமான தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அதாவது “இந்தியன் 2” திரைப்படத்தின் நீளம் அதிகமாகிவிட்டதாகவும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் Footage வந்ததால் “இந்தியன் 3” ஆக அதனை வெளியிட்டுவிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
ஒரு படம் அதிகபட்சம் 3 மணி நேரம் இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் ரசிகர்கள் படம் 2.30 மணி நேரம் என்றாலே போர் அடித்துவிடும் என்று கூறுகின்றனர். ஆனால் “இந்தியன் 2” திரைப்படத்தின் நீளம் 6 மணி நேரம் வந்திருக்கிறது. இந்த 6 மணி நேரத்தை 2.30 மணி நேரமாக சுருக்குவதில் நிச்சயம் சிக்கல் இருந்திருக்கும். ஆதலால் அதனை பிரித்து “இந்தியன் 3” ஆக வெளியிட்டுவிடலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம். அதாவது “இந்தியன் 3” திரைப்படம் முழுமையாக உருவாவதற்கு சில காட்சிகளை படமாக்க வேண்டியது உள்ளதாம். அந்த காட்சிகளை படமாக்க கமல்ஹாசன் 25 நாட்கள் கால்ஷீட் தந்தால்தான் படமாக்க முடியுமாம்.
ஆதலால் “இந்தியன் 2” திரைப்படம் வெளியான பிறகு 6 மாதங்கள் கழித்து கமல்ஹாசனிடம் கால்ஷீட் வாங்கி “இந்தியன் 3” படத்தை முழுமையாக முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த தகவலை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





