தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990களில் நிறைய குடும்ப படங்கள் வெளியாகின. குறிப்பாக விசு இயக்கிய பல படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்திய படங்களாக இருந்தன. ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. அதனால் விசு படங்கள் என்றாலே குடும்பத்துடன் ரசிகர்கள் செல்வார்கள்.
அதே வரிசையில், பல வெற்றிக்கரமான குடும்ப சித்திரங்களை தந்தவர் இயக்குனர் வி சேகர். அவரது இயக்கத்தில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் வரவு எட்டணா செலவு பத்தனா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பொங்கலோ பொங்கல் ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொறந்த வீடா புகுந்த வீடா பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் நான் பெத்த மகனே என வி சேகரின் பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக உள்ளன.
சிவக்குமார் நாசர் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் கரண் சந்திரசேகர் என சின்னி ஜெயந்த் சார்லி நிழல்கள் ரவி மனோரமா போன்றவர்களே இவரது படத்தில் பிரதான கேரக்டர்களாக இருப்பார்கள். குடும்ப கதைகளாக யதார்த்தமான கதை பின்னணியில் வி சேகர் படங்கள் நிச்சயமாக ரசிக்கும் படியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும்.
இவரது படங்களில் காமெடி கேரக்டரில் பெரும்பாலும் கவுண்டமணி செந்தில் நடித்திருப்பார்கள். படத்தின் ஹீரோவை விட இவர்களுக்கே அதிகளவில் காட்சிகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக வி சேகர் இயக்கிய படங்களில் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இயக்குனர் வி சேகர் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் என்பது ரஜினியின் உழைப்பு வந்திருக்கிறது. இதை நான் பாராட்டுகிறேன். ஆனால் உண்மையில் இன்னொரு சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் கவுண்டமணி தான். ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற ஒரு படம் பண்ணினேன். அதில் வெட்டியான் கேரக்டரில் சுடலையாக கவுண்டமணி நடித்தார்.
சுடுகாட்டில் உள்ள வெட்டியான் கேரக்டரில் நடிக்க சொன்னால் யாராக இருந்தாலும் யோசிப்பார்கள். ஆனால் கவுண்டமணி துணிந்து நடித்தார். அந்த படத்துக்காக முதலில் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். அப்புறம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். அப்போது கவுண்டமணியின் ஒரு நாள் சம்பளம் 2 லட்சம் ரூபாயாக இருந்தது. எனினும் என்னிடம் ரூ. 5 லட்சம் மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்து கொடுத்தார், என்று வி சேகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





