சின்னத்திரையில் வெள்ளித்திரைக்கு செல்பவர்கள் அவ்வளவு சுலபமாக டாப் இடத்திற்கு வந்துவிட முடியாது.ஆனால் இவர்களில் விதிவிலக்காக அமைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது அது இது எது நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொரு ரசிகரின் மனதிற்குள் இடம்பிடித்த சிவகார்த்திகேயன், அதனை வெள்ளித்திரைக்கு சென்றபோது மிஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டார்.
தனக்கு எது வருமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்த நடிகர், ஆரம்பத்தில் நகைச்சுவை சார்ந்த படங்களை டிக் செய்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் படங்களை கொடுத்து அவர் மாபெரும் வெற்றியை பெற்றார். அனைவரும் சிவகார்த்திகேயனை பற்றியே பேசி கொண்டிருக்க இடையில் சில சறுக்கல்களையும் அவர் சந்தித்தார்.
ஹீரோ, மிஸ்டர் லோக்கல், சீமராஜா என அவர் தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் திரையரங்கு உரிமையாளர்களையும், ரசிகர்களையும் சோதித்தன. இந்த சமயத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் எஸ்.கே.வுக்கு கை கொடுத்தது. டார்க் காமெடி ரகமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க, முதல் முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
பின்னர் டான், மாவீரன், அயலான் என எஸ்கேவின் படங்கள் வெற்றி பயணமாக அமைய, தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் எழுவதுவதிலும் அவர் ஆர்வம்காட்டி வருகிறார். தற்போது எஸ்.கே. தயாரித்து சூரி நடித்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் மறைமுகமாக பலரும் உதவி செய்து இங்கு நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீஸ்ட் படத்தில் அவர் எழுதிய பாடலுக்கு கிடைத்த வருமானத்தை, மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதேபோல், மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக படங்களை இயக்கியவரும், மறைந்த இயக்குனருமான ராசு மதுரவன் குடும்பத்திற்கு அவர் உதவிகளை செய்தார்.
இதனை குறிப்பிட்டு இயக்குநர் கரு. பழனியப்பன் பாராட்டியுள்ளார். இந்த வரிசையில் தற்போது வெயில், அங்காடி தெரு படங்களின் இயக்குநர் வசந்தபாலனும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா இரண்டாம் அலையின்போது நான் பாதிக்கப்பட்டதை அறிந்து உதவ வந்தவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவர் என்னிடம் கேட்கும்போது, மருத்துவ பாலிசி இருப்பதாக கூறி நன்றி தெரிவித்தேன். ராசு மதுரவன் போன்றே நானும் எந்தவிதத்திலும் அவருக்கு சம்மந்தமில்லாதவன் என்று கூறி நன்றி பாராட்டியுள்ளார். இயக்குநரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





