- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நட்சத்திர நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை -...

மலையாள நட்சத்திர நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை – சொகுசு கார்கள் அதிரடியாக பறிமுதல்!

- Advertisement -

மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான். இதில் ஆடுஜீவிதம் எம்புரான் 2 போன்ற படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் பிருத்விராஜ். அதே போல் லக்கி பாஸ்கர் படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாகும்.
மலையாள சீனியர் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோருக்கு கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. அங்கு குடும்பத்துடன் அவர்கள் வசித்து வருகின்றனர்.

கொச்சியில் உள்ள அவர்கள் இருவரது வீடுகளிலும் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் குழு நுழைந்து இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பூடானில் உயர் ரகமான விலை அதிகமுள்ள சொகுசு வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி அதை இமாச்சல பிரதேசத்திற்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்துள்ளனர்.

திரைப்பட நடிகர்களை குறி வைத்து இந்த வாகனங்கள் விற்பனை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மலையாள நட்சத்திர நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரது வீடுகள் உள்பட கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இவ்வாறு கேரளா மாநிலத்துக்குள் மட்டும் 30 வாகனங்கள் முறைகேடாக கொண்டு வரப்பட்டதாகவும் அவைகளை நடிகர் துல்கர் சல்மான், நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்டோர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. முறையான விற்பனை வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அதனை விற்பனை செய்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில் நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரது சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மலையாள சினிமா வட்டாரத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்புரான் 2 படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ் மத்திய அரசு பாஜகவுக்கு எதிரான காட்சிகளை அதில் வைத்திருந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்